சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜாமீனில் வந்த ரவுடி குத்திக்கொலை - 3 பேர் கும்பல் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜாமீனில் வெளியே வந்த ரவுடி குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-18 06:22 GMT

சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரைச் சேர்ந்தவர் குமார் என்ற குள்ளகுமார் (வயது 21). இவர் மீது நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று முன்தினம் மாலை நுங்கம்பாக்கம், டேங்க் பன்ட் ரோட்டில் உள்ள ஒரு கடை வாசலில் நண்பர்களுடன் குமார் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது ஆட்டோவில் வந்த அதே பகுதியை சேர்ந்த தனசேகர் மற்றும் 2 பேர், குமாரிடம் தகராறு செய்தனர். வாய்த்தகராறு முற்றவே, திடீரென குமாரை கத்தியால் குத்தி விட்டு அந்த 3 பேரும் தப்பியோடிவிட்டனர்.

ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த குமார், உயிருக்கு போராடினார். உடனடியாக, சிகிச்சைக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோதும், குமார் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக இந்த கொலை தொடர்பாக தனசேகர் (26), அவரது கூட்டாளிகளான அதே பகுதியைச் சேர்ந்த ராஜா (33), ஒக்கியம் துரைப்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த பார்த்திபன் (30) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய 1 ஆட்டோ மற்றும் 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் கூறியதாவது:-

கைதான தனசேகர், இறந்துபோன குமாரின் சகோதரர் தாமோதரன் என்பவருக்கு தவணை முறையில் ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் மாத தவணையை முறையாக செலுத்திய தாமோதரன், சில மாதங்களாக தவணைத்தொகையை கட்டவில்லை.

இதனால் கோபம் அடைந்த தனசேகர், தாமோதரனிடம், "ஒழுங்காக தவணை தொகையை கட்டவும், இல்லை என்றால் ஆட்டோவை எடுத்து சென்று விடுவேன்" என மிரட்டினார். இதுகுறித்து, தனது சகோதரர் குமாரிடம் தாமோதரன் கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த குமார், கடந்த மே மாதம் புஷ்பா நகரில் நடந்த கோவில் திருவிழாவின்போது தனசேகரை கத்தியால் குத்தினார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குமார் சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். இந்த முன்விரோதம் காரணமாக தனசேகர், அவரது நண்பர்களுடன் சேர்ந்து குமாரை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்