விநாயகர் சிலைகள் ஊர்வலம்
அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
ஊர்வலம்
அரியலூர் பொன்னுசாமி அரண்மனை தெருவில் விநாயகர் சதுர்த்தி அன்று 5 அடி உயர விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இந்த நிலையில் 3-ம் நாளான நேற்று விநாயகர் ஊர்வலம் நடைபெற்று மருதையாற்றில் சிலைகள் கரைக்கப்பட்டது. இதேபோல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பொதுமக்கள் சார்பில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கொள்ளிடம் ஆற்றில் கரைக்கப்பட இருந்தன. இவற்றில் சென்ற ஆண்டு 139 சிலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதேபோல் இந்த ஆண்டும் அதே 139 சிலைகளுக்கு போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இவற்றில் சுமார் 130-க்கும் மேற்பட்ட சிலைகள் ஜெயங்கொண்டத்தில் உள்ள வேலாயுதநகருக்கு நேற்று மாலை கொண்டு வரப்பட்டு அவைகளுக்கு பூஜைகள் செய்து வழிப்பட்டனர். பின்னர் இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் பழனிசாமி தலைமையில், திருச்சி கோட்ட செயலாளர் ராஜசேகர், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராமபாலமுருகன் ஆகியோர் முன்னிலையில் அகில இந்திய முக்குலத்தோர் பாசறை நிறுவனத் தலைவர் மீன்சுருட்டி சிற்றரசு விஜர்சன ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில துணைப் பொதுச் செயலாளர் முருகானந்தம் சிறப்புரையாற்றினார். இதில் டாக்டர் பரமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பலத்த பாதுகாப்பு
65 சிலைகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டது மீதமுள்ள சிலைகள் தனித்தனியாக கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஆண்டிமடத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு வழியாக நேராக அணைக்கரைக்கு அனுப்பப்பட்டது.
ஊர்வலம் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிசேகர், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் ஆகியோர் ஆலோசனையின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மையப்பகுதியில்...
தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 19 விநாயகர் சிலைகள் தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் இருந்து தா.பழூரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இதற்கு இந்து முன்னணி ஒன்றிய தலைவர் விஜய் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மணிகண்டன் வரவேற்று பேசினார். பா.ஜ.க. மாவட்ட செயலாளர் இளையராஜா மற்றும் விஷ்வ இந்து பரிசத் மாவட்ட செயலாளர் முத்துவேல் ஆகியோர் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதற்கு பா.ஜ.க. மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். தா.பழூர் பா.ஜ.க. பொறுப்பாளர் செந்தில்குமார் நன்றி தெரிவித்து பேசினார். மதனத்தூர் கொள்ளிடம் ஆற்று பாலத்தில் மையப் பகுதியில் சிலை கரைப்பதற்காக போலீசார் கிரேன் வசதி ஏற்பாடு செய்து இருந்தனர். மதனத்தூர் போலீஸ் சோதனை சாவடி அருகில் விநாயகர் ஊர்வலம் தடுத்து நிறுத்தப்பட்டது.
கரைக்கும் பணி
அங்கிருந்து ஒவ்வொரு சிலையாக பாலத்தின் சிலை கரைக்கும் இடத்திற்கு அனுப்பப்பட்டு கிரேன் மூலம் ஆற்றில் கரைக்கப்பட்டது. அரியலூர் மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு காமராஜ், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு மணவாளன், தா.பழூர் இன்ஸ்பெக்டர் கதிரவன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஜெயங்கொண்டம் தீ அணைப்பு மற்றும் மீட்பு படை அலுவலர் காமராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சிலை கரைக்கும் பணியில் ஈடுபட்டனர். மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றில் இந்து முன்னணி சார்பில் 19 விநாயகர் சிலைகளும், பல்வேறு கிராமங்களில் சார்பில் அமைக்கப்பட்டிருந்த 17 விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன.