விநாயகர் சிலைகள் ஊர்வலம்

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.

Update: 2023-09-20 19:54 GMT


மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலைகள்

விருதுநகர் நகர் பகுதி, பாண்டியன் நகர், வச்சக்காரப்பட்டி, சூலக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் கடந்த 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இந்து முன்னணி சார்பில் 25-வது ஆண்டாக விருதுநகரில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையடுத்து நேற்று மாலை விருதுநகர் தேசபந்து திடலில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் புறப்பட்டது. இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பொன்னையா தலைமையில் இந்தநிகழ்ச்சி நடைபெற்றது. கன்னியாகுமரி இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் சிறப்புரையாற்றினார்.

நீர்நிலைகளில் கரைப்பு

ஊர்வலத்தை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுெரங்கன் தொடங்கி வைத்தார். 31 விநாயகர் சிலைகள் மேளதாளத்துடன் பக்தர்கள் புடை சூழ ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

விநாயகர் சிலைகள் விருதுநகர் புறவழிச்சாலையில் உள்ள கல் கிடங்கில் உள்ள நீரில் கரைக்கப்பட்டது. விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டபோது பாதுகாப்பு கருதி மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்தனர். இந்தநிலையில் பக்தர்கள் செல்போன் ஒளியில் ஊர்வலத்தை தொடர்ந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு இந்து முன்னணி சார்பில் நேற்று மாலை ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது.

விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஊர்வலத்திற்கு பிறகு விநாயகர் சிலைகள் குளத்தில் கரைக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்