1,600 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 1,600 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2022-08-30 14:50 GMT

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 1,600 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

விநாயகர் சதுர்த்தி

நாடு முழுவதும் இந்துக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை வீடுகள், கோவில்கள் மற்றும் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்து காலையிலும், மாலையிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். பின்னர் பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று அருகே உள்ள நீர்நிலைகளில் கரைப்பார்கள். இந்த சிறப்பு மிகுந்த விநாயகர் சதுர்த்தி விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. ஊர்வலத்துக்கும் அரசு தடை விதித்து இருந்தது.

பிரதிஷ்டை

இந்த நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு எந்த தடையும் இல்லாததால் பொதுமக்கள் இன்று (புதன்கிழமை) அதிகாலையிலேயே எழுந்து குளித்து விநாயகர் சிலைகளை வீடுகளில் பிரதிஷ்டை செய்ய உள்ளனர். அதே போல இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் இந்து அமைப்புகள் சார்பில் கடந்த முறை பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுமார் 1,600 இடங்களில் இந்த ஆண்டும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

பழங்கள் விலை உயர்வு

விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜை செய்வதற்கான பொருட்கள் விற்பனை நேற்று 'களை' கட்டியது. அதாவது பூக்கள், பழ வகைகள், வெற்றிலை, பாக்கு, அவல், பொரி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது. நாகர்கோவிலை பொறுத்த வரையில் வடசேரி சந்தை, அப்டா மார்க்கெட், அரசு மூடு சந்திப்பு, கோட்டார் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் நாகர்கோவிலில் நேற்று போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்கள் மற்றும் பழவகைகள் விலை நேற்று உயர்ந்து இருந்தது அதாவது நேற்று முன்தினம் ரூ.100-க்கு விற்பனை ஆன ஒரு கிலோ ஆப்பிள் ரூ.120-க்கு விற்பனை ஆனது. இதே போல 180-க்கு விற்ற மாதுளை ரூ.200-க்கும், ரூ.80-க்கு விற்பனையான திராட்சை ரூ.90-க்கும், ரூ.80-க்கு விற்ற கொய்யாப்பழம் ரூ.90-க்கு விற்பனை ஆனது. இதே போல் வாழைப்பழம் மற்றும் பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.

-------

Tags:    

மேலும் செய்திகள்