சதுர்த்தி விழாவை முன்னிட்டுவிநாயகர் சிலைகள் வைக்க கட்டுப்பாடுகள்கலெக்டர் சரயு தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட கலெக்டர் சரயு கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்.

Update: 2023-09-16 19:45 GMT

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட கலெக்டர் சரயு கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிலைகள் அமைக்க வழிக்காட்டு நெறிமுறைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, உதவி கலெக்டர்கள் சரண்யா, பாபு, ஊராட்சிகள் உதவி இயக்குனர் மகாதேவன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், தாசில்தார்கள், இந்து முன்னணி நிர்வாகிகள், விழா ஏற்பாட்டாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் சரயு பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சிலைகள் அமைக்க அந்தந்த பகுதி உதவி கலெக்டர்களிடம் மனு அளித்து அனுமதி பெற்றிருக்கவேண்டும். நிறுவப்படும் சிலைகள், 10 அடி உயரத்திற்கு மேல் இருக்கக் கூடாது. சிலை அமைக்கப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும். சிலை அமைக்கும் இடம் தனியாருடையதாக இருப்பின், நிலத்தின் உரிமையாளரிடம், தடையின்மை சான்றும் பெற வேண்டும். தீயணைப்பு துறையினரால தீத்தடுப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.

இடவசதி

மேலும், மின்சார வாரியத்தில், மின் இணைப்பு எங்கிருந்து பெறப்படுகிறது என்பதற்கான சான்று இணைக்க வேண்டும். விநாயகர் சிலை களிமண்ணால் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும். நீரில் கரையும் மற்றும் மக்கும் தன்மையுள்ள பொருட்களால் ஆன சிலைகளை பயன்படுத்த வேண்டும். சிலைகள் நிறுவ அமைக்கப்படும் கொட்டகை எளிதில் தீப்பிடிக்காத பொருட்களை கொண்டு இடவசதி அமைக்க வேண்டும்.

அரசு துறைகளால் விதிக்கப்படும் நிபந்தனைகளை பின்பற்றி நடந்துகொள்ள வேண்டும். சிலைகளை 5 நாட்களுக்குள் நீர்நிலைகளில் கரைத்து விட வேண்டும். சிங்காரப்பேட்டை பெரிய ஏரி, ஊத்தங்கரை பாம்பாறு அணை, கல்லாவி தென்பெண்ணையாறு, மஞ்சமேடு தென்பெண்ணையாறு, கிருஷ்ணகிரி அணை, கும்மனூர் தென்பெண்ணையாறு ஆகியவற்றில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்.

முழு ஒத்துழைப்பு

மேலும் எண்ணேக்கொல்புதூர் தென்பெண்ணையாறு, கொத்தூர் ஏரி, ஓசூர் சந்திராம்பிகை ஏரி, ராமநாயக்கன் ஏரி, கெலவரப்பள்ளி அணை, அச்செட்டிப்பள்ளி ஏரி மற்றும் கர்நூர் ஏரி, சந்தாபுரம் ஏரி, பாகலூர் தென்பெண்ணையாறு, சூளகிரி துரை ஏரி, தேன்கனிக்கோட்டை பட்டாளமண் ஏரி, பென்னங்கூர் ஏரி, தளி கவுரம்மா ஏரி மற்றும் சின்னட்டி ஏரி ஆகிய நீர் நிலைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி சிலைகள் அமைக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்