கோவில் குளத்தில் விநாயகர் சிலை கண்டெடுப்பு
தக்கலை அருகே கோவில் குளத்தில் விநாயகர் சிலை கண்டெடுப்பு;
தக்கலை,
தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரத்தில் பாலசுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. தனியார் வசம் இருந்த இந்த கோவிலை 2021 -ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதனையடுத்து கோவிலில் பூசாரி நியமிக்கப்பட்டு தினமும் பூஜைகள் நடந்து வருகிறது. இந்த கோவில் தனியாரிடம் இருந்தபோது தெற்குபாகத்தில் இருந்த சிறிய நீராளிகுளம் பராமரிப்பு இல்லாமல் மண் நிரம்பி மூடி இருந்தது. இதனை அறநிலையத்துறை மூலம் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் குளத்தை தூர்வாரிய போது கல்லால் ஆன சிறிய விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலை சுமார் 2 அடி உயரத்தில் இருந்தது. இது குளம் பயன்பாட்டில் இருந்த போது கரையில் இருந்த சிலையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலையை பக்தர்கள் பலரும் வணங்கி சென்றனர்.