நாளை விநாயகர் சதுர்த்தி விழா: தயார் நிலையில் பிரமாண்ட சிலைகள்

விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் ஆங்காங்கே பிரதிஷ்டை செய்வதற்கு ஏற்ப பிரமாண்ட விநாயகர் சிலைகள் தயார் நிலையில் உள்ளன.

Update: 2022-08-30 00:13 GMT

சென்னை,

கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ள நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

இதற்காக தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் 1¼ லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 501 சிலைகள் வைக்கப்பட உள்ளன.

கொரோனா தடுப்பூசி நாயகன்

இந்து முன்னணி தவிர மேலும் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் தனிநபர்களும் ஆங்காங்கே பிள்ளையார் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய தயார் நிலையில் உள்ளனர். இதற்காக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பிள்ளையார் சிலைகள் களிமண் மற்றும் 'பிளாஸ்டர் ஆப் பாரிசாலும்' செய்யப்பட்டு வருகின்றன.

பொதுவாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும்போது, அந்த நேரத்தில் நடைபெறும் பிரபலமான நிகழ்வுகளை மையப்படுத்தி விநாயகர் சிலைகள் தயாரிப்பது வழக்கம்.

2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படாமல் இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில் உலகம் முழுவதும் உள்ள மக்களை வாட்டி வதைத்த கொரோனா வைரசை கட்டுப்படுத்திய கொரோனா தடுப்பூசியை மையப்படுத்தி இந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி நாயகன் விநாயகர் புதுவரவு பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

செஸ் விளையாடும் பிள்ளையார்

இதே போன்று, கடந்த ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 40-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. இதனை மையப்படுத்தி பிள்ளையாரும், முருகரும் செஸ் விளையாடுவது போன்ற சிலைகளும் புதுவரவு பட்டியலில் இடம் பெற்றுள்ளன. மேலும், வழக்கம் போல் சிவன் மற்றும் விஷ்ணு வடிவில் பிள்ளையார், சக்தியுடன் பிள்ளையார், சித்தி மற்றும் புத்தியுடன் பிள்ளையார், மலேசியா முருகன் வடிவிலான பிள்ளையார், யானை மீது பிள்ளையார், புலிகள் மீது பிள்ளையார், கருடன் மற்றும் மயில் மீது பிள்ளையார், சிக்ஸ் பேக் பிள்ளையார் என பல்வேறு வடிவிலான பிள்ளையார் சிலைகள் 3 அடி முதல் 15 அடி உயரம் வரையில் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்து வழிபட தயார் நிலையில் உள்ளன.

இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும் விசர்ஜன விழா அவரவர் விருப்பத்திற்கு இணங்க வருகிற 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா 4-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த விநாயகர் சிலைகள் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர், நவ்ரோஜி தெருவில் பிள்ளையார் சிலைகள் தயாரிக்கும் தொழில் செய்து வரும் கொல்கத்தாவை சேர்ந்த பரத்நாத் பால் என்கிற பாபி கூறியதாவது:-

25 ஆண்டுகளுக்கு மேலாக...

நான் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பிள்ளையார் சிலைகள் செய்யும் தொழில் செய்து வருகிறேன். ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தொடங்கி விநாயகர் சதுர்த்தி விழா வரை நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய சிலைகள் தயாரித்து வழங்குவேன். ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுமா? என்ற சந்தேகத்தின் காரணமாக சிலைகள் செய்ய தொடங்கவில்லை. எனவே, இந்த ஆண்டு வெறும் 35 பெரிய சிலைகள் மட்டுமே செய்ய முடிந்தது.

நான் பிள்ளையார் சிலை செய்வதற்காக கொல்கத்தாவில் இருந்து லாரிகள் மூலம் பிரத்யேகமான களிமண் கொண்டு வந்து வைக்கோல் மற்றும் களிமண் மூலம் மட்டும்தான் சிலைகளை செய்து வருகிறேன். தொழிலாளர்களும் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள்தான். கடந்த 20 நாட்களாக நாங்கள் இரவு பகல் பாராமல் வேலை பார்த்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்