விநாயகர் சதுர்த்தியை அலங்கரிக்க விற்பனைக்கு தயாரான சிலைகள்

விநாயகர் சதுர்த்தியை அலங்கரிக்க தர்மபுரி பகுதியில் விதவிதமான சிலைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. ஆனால் தொடர் மழையால் வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Update: 2022-08-27 16:08 GMT

விநாயகர் சதுர்த்தியை அலங்கரிக்க தர்மபுரி பகுதியில் விதவிதமான சிலைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. ஆனால் தொடர் மழையால் வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தர்மபுரி பகுதியில் அதியமான்கோட்டை, சவுளூர் உள்ளிட்ட பகுதிகளில் அரை அடி முதல் 10 அடி உயரமுள்ள களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் மற்றும் காகித கூழ், கிழங்கு மாவை கொண்டு சுமார் 18 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளன.

களி மண்ணால் ஆன சிலைகளுக்கு தற்போது வர்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் இருந்து சேலம், ஈரோடு, கோவை, நாமக்கல், ஓசூர் மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூரு போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சிலைகளை முன்பதிவு செய்துள்ளனர். ஒருசில வியாபாரிகள் இப்போதே வாங்கி சென்று குடோன்களில் இருப்பு வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

விதவிதமான சிலைகள்

சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், தண்ணீரில் எளிதாக கரையும் வகையில் ரசாயனம் கலப்படம் இல்லாத கற்பக விநாயகர், அன்னபறவை விநாயகர், மயில்வாகன விநாயகர், எலி விநாயகர், லிங்க விநாயகர், தாமரை விநாயகர், நந்தி விநாயகர், மான் விநாயகர், காமதேனு விநாயகர், சிங்க விநாயகர், யானை விநாயகர், சூலம் விநாயகர் உள்ளிட்ட 25 வகையான விநாயகர் சிலைகள் அலங்கரித்து விற்பனைக்கு தயாராக உள்ளன. களிமண்ணால் ஆன சிலைகள் ரூ.50 முதல் ரூ.9,000 வரையிலும், காகித கூழ் மற்றும் கிழங்கு மாவினால் ஆன சிலைகள் ரூ.5,000 முதல் ரூ.20,000 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் சிலை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சிலைகள் விற்பனை இல்லாத நிலையில் இந்த ஆண்டு விற்பனை சூடு பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த வியாபாரிகளுக்கு மழை கை கொடுக்குமா?

Tags:    

மேலும் செய்திகள்