திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-09-02 19:14 GMT

விநாயகர் சிலை

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் திண்டுக்கல் நகரில் மட்டும் 65 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இந்த சிலைகளின் ஊர்வலம் நேற்று மாலை நடைபெற்றது. இதற்காக நகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள், பஸ்நிலையம் முன்பு கொண்டு வரப்பட்டன.

இதையடுத்து மேள, தாளம் முழங்க விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. மினிலாரி, சரக்கு வாகனங்களில் சிலைகள் எடுத்து செல்லப்பட்டன. இதில் இந்து முன்னணி மாநில துணை தலைவர் கார்த்திகேயன், மதுரை கோட்ட செயலாளர் சங்கர்கணேஷ், மாவட்ட தலைவர் ராஜா, செயலாளர்கள் சஞ்சீவிராஜ், வீரதிருமூர்த்தி, துணை தலைவர் வினோத்ராஜ், பாலசங்கர், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம்

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி ஊர்வலம் ஏ.எம்.சி.சாலை, 4 ரதவீதிகள், வெள்ளை விநாயகர் கோவில், மெயின்ரோடு, மார்க்கெட் வழியாக கோட்டை குளத்தை சென்றடைந்தது. அங்கு பூஜைகள் நடத்தப்பட்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதையொட்டி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மேற்பார்வையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

குடைப்பாறைப்பட்டியில் நேற்று காலை 10.30 மணிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு தாரை, தப்பட்டை முழங்க விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. இதில் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊர்வலம் பேகம்பூர் சிக்னல், யானை தெப்பம் வழியாக சென்று கோட்டைக்குளத்தில் சிலைகள் கரைக்கப்பட்டது.

ஒட்டன்சத்திரம், கன்னிவாடி

ஒட்டன்சத்திரத்தில் பழனிரோடு, தாராபுரம் ரோடு, ஏ.பி.பி.நகர் வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலம் சென்று விருப்பாட்சி தலையூத்து ஆற்றுப்பகுதியில் கரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில செயலாளர் சண்முகம், பா.ஜ.க. மாவட்ட தலைவர் கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி, நகர தலைவர் சிவா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கன்னிவாடியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநயாகர் சிலைகள் நவாப்பட்டி, மணியக்காரன்பட்டி, புதுப்பட்டி வழிேய ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆலந்தூரான்பட்டி மச்சக்குளத்தில் கரைக்கப்பட்டது. முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சிவாஜி, ஒன்றிய தலைவர் தினகரன், நகர செயலாளர் அய்யனார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி மற்றும் சுற்றப்புற பகுதிகளில் வைத்து பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தடியன்குடிசை ஆற்றில் கரைக்கப்பட்டது. முன்னதாக அப்பகுதி பெண்கள் முளைப்பாரியுடன் சென்றனர்.

பழனி

பழனியில், இந்து சக்தி சங்கமம் சார்பில், விநாயகர் சிலைகள் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. பாதவிநாயகர் கோவில் பகுதியில் இருந்து சன்னதிவீதி, பஸ்நிலையம், காந்தி மார்க்கெட், தேரடி வழியே சண்முகநதிக்கு வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட சிலைகள் பின்பு ஆற்றில் கரைக்கப்பட்டன. இதில் பா.ஜ.க. இளைஞரணி மாவட்ட தலைவர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

குஜிலியம்பாறையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. பாளையத்தில் தொடங்கிய சிலை ஊர்வலம் புளியம்பட்டி வழியாக ஆர்.கோம்பை பங்களாமேடு குளத்தை சென்றடைந்தது. அங்கு விநாயகர் சிலைக்கு பூஜைகள் செய்யப்பட்டு கரைக்கப்பட்டது. வடமதுரையில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க.வினர் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நரிப்பாறை குவாரி குளத்தில் கரைக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்