திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம்

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவின் மூன்றாம் நாளான வியாழக்கிழமை சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-10-27 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

கந்தசஷ்டி திருவிழா

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 3-ம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

காலையில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் வெள்ளி சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சுவாமிக்கு அபிஷேகம்

மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமி- அம்பாள்களுக்கு மஞ்சள், பால், இளநீர், தேன், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து சுவாமி-அம்பாள்களுக்கு அலங்காரமாகி, தீபாராதனை நடைபெற்றது. அதன்பிறகு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாளை மறுநாள் சூரசம்ஹாரம்

6-ம் நாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 7-ம் நாளான வருகிற 31-ந்தேதி (திங்கட்கிழமை) இரவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்