பல்வேறு இடங்களில் சூதாடியவர்கள் கைது
ராமநாதபுரத்தில் பல்வேறு இடங்களில் சூதாடியவர்களை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் பல்வேறு இடங்களில் சூதாடியவர்களை போலீசார் கைது செய்தனர்.
ரோந்து பணி
ராமநாதபுரம் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சக்கரக்கோட்டை கோவில் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடியது தெரிந்தது. இதனை தொடர்ந்து ஆர்.எஸ்.மடை பழனி (வயது38), எம்.எஸ்.கே.நகர் சேதுமுருகன் (39), பசும்பொன்நகரை சாமிதுரை (63), சுரேஷ்பாபு (53) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து சூதாட பயன்படுத்திய பணம் ரூ.1,100-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது ஆர்.ஆர்.சேதுபதி நகர் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் அறையில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சோதனையிட்டபோது மாரியம்மன்கோவில் தெரு செல்வகுமார் (47), பசும்பொன்நகர் உதயகார்த்திக் (27), வாலாந்தரவை முருகேசன் (42), மாரியம்மன்கோவில் தெரு கணேஷ் (33), நாகஅர்ஜுன் (26) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்த சூதாட பயன்படுத்திய ரொக்க பணம் ரூ.20 ஆயிரத்து 250-ஐ பறிமுதல் செய்தனர்.
லாட்டரி விற்றவர்கள் கைது
ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்மேகம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சின்னக்கடை மோர்க்கடை தெரு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றவரை பிடித்து சோதனையிட்டனர். அவரிடம் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளும், அதனை விற்ற பணம் ரூ.100 இருந்தது தெரிந்து அதனை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பாலசுப்பிரமணியசுவாமி கோவில் தெரு பகுதியை சேர்ந்த தங்கச்சாமி மகன் ரவிச்சந்திரன் (45) என்பவரை கைது செய்தனர்.
இதேபோல, ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது தங்கப்பா நகர் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரிகளுடன் தங்கப்பாநகர் சீனிமுகம்மது மகன் செய்யது அபுதாகிர் (35) என்பவரை கைது செய்தனர்.