தற்கொலை செய்தவரின் உடலுக்கு சொந்த வீட்டில் இறுதி சடங்கு
வீட்டை காலி செய்ய மறுத்தவர்களை பொதுமக்கள் விரட்டியடித்த பிறகு தற்கொலை செய்த தனியார் நிறுவன கணக்காளரின் உடலை குடும்பத்தினர் வாங்கி சென்றனர். மேலும் அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் சொந்த வீட்டில் வைத்து இறுதி சடங்கை செய்தனர்.
குழித்துறை,
வீட்டை காலி செய்ய மறுத்தவர்களை பொதுமக்கள் விரட்டியடித்த பிறகு தற்கொலை செய்த தனியார் நிறுவன கணக்காளரின் உடலை குடும்பத்தினர் வாங்கி சென்றனர். மேலும் அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் சொந்த வீட்டில் வைத்து இறுதி சடங்கை செய்தனர்.
தனியார் நிறுவன கணக்காளர்
குமரி மாவட்டம் அருமனை அருகே பத்துகாணி நிரப்புரோட்டை சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 50). இவருடைய மனைவி நளினா (45). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நளினா ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவருடைய 2 குழந்தைகளும் வெளியூரில் படித்து வருகின்றனர்.
ஹரிஹரன் வெளிநாட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். பின்னர் சொந்த ஊருக்கு வந்த அவர் அதன் பிறகு வெளிநாட்டுக்கு செல்லவில்லை. மேலும் குழித்துறை பகுதியில் தங்கியிருந்தபடி தனியார் நிறுவனத்தில் கணக்காளர் பணிக்கு சென்று வந்தார்.
வீட்டை காலி செய்ய மறுப்பு
இந்தநிலையில் சொந்த ஊரில் உள்ள வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். அங்கு ஒரு ஆணும், ஒரு பெண்ணும் வசித்து வந்தனர். இந்த வீட்டை காலி செய்யக்கோரி ஹரிகரன், அவரது மனைவி நளினாவும் சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவர்கள் காலி செய்ய மறுத்தனர்.
இதுதொடர்பான பிரச்சினை போலீஸ் நிலையம் வரை சென்றது. ஆனால் முடிவு எட்டப்படவில்லை. அதே சமயத்தில் வீட்டை காலி செய்ய மறுத்தவர்களால் ஹரிகரன் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில் மனைவி நளினாவுக்கு இ-மெயிலில் தகவல் அனுப்பி விட்டு ஹரிகரன் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாடகைக்கு தங்கியிருந்தவர்கள் கொடுத்த நெருக்கடியால் ஹரிகரன் தற்கொலை செய்த சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் போலீசார் ஹரிகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே ஹரிகரனின் உறவினர்கள் போலீசாரிடம் விடுத்த கோரிக்கையில், வீட்டில் குடியிருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களை அப்புறப்படுத்திய பிறகு ஹரிகரன் உடலை அங்கு வைத்து இறுதி சடங்கை நிறைவேற்றிய பிறகு தகனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனர். இதனால் இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பும், பதற்றமும் உருவானது.
உடலை வாங்கிய உறவினர்கள்
நேற்றுமுன்தினம் இரவு வரை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவொரு தீர்வும் ஏற்படவில்லை. பின்னர் நள்ளிரவில் அருமனை போலீசார் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதன்காரணமாக வீட்டை காலி செய்ய மறுத்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து நேற்று காலையில் ஹரிகரனின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் உடலை வாங்கிக் கொண்டு சொந்த ஊரான அவருடைய வீட்டுக்கு எடுத்து சென்றனர்.
அங்கு உடலை வைத்து உறவினர்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதாவது வீட்டை காலி செய்ய வாடகைதாரர்கள் மறுத்ததாலும், அவர்கள் கொடுத்த தொந்தரவினாலும் ஹரிகரன் உயிரை விட்டதால், அவருடைய நிறைவேறாத ஆசையை நிறைவேற்றும் வகையில் வீட்டில் சிறிது நேரம் உடலை வைத்தனர். இறுதிச்சடங்குகளும் செய்யப்பட்டன. அப்போது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. பின்னர் உடலை எடுத்துச்சென்று தகனம் செய்தனர். இதனால் 2 நாட்கள் நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.