குடிநீர் பற்றாக்குறையை விரைந்து தீர்க்க வேண்டும்

குடிநீர் பற்றாக்குறையை விரைந்து தீர்க்க வேண்டும்

Update: 2023-06-16 10:37 GMT

திருப்பூர்

ஊரக பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி உத்தரவிட்டார்.

ஆய்வுக்கூட்டம்

தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தலைமை தாங்கினார். கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.

தாராபுரம் நகராட்சி, தாராபுரம், மூலனூர், குண்டடம் ஊராட்சி ஒன்றியங்கள், குளத்துப்பாளையம், சின்னக்காம்பாளையம், மூலனூர், ருத்ராவதி, கன்னிவாடி பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தாராபுரம் நகராட்சியின் பொது விவரங்கள், குடிநீர் வினியோகம், செயல்பாட்டில் உள்ள திட்டப்பணிகள், முடிவுற்ற திட்டப்பணிகள், முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம், 15-வது நிதிக்குழு மானிய திட்ட நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஊராட்சி ஒன்றியங்களில் 15-வது நிதிக்குழு மானிய திட்ட பணிகள், எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி, கிராம சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப்பணிகள், பூங்காக்கள் மற்றும் கட்டிடங்கள் பராமரிப்பு, சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு நடந்தது.

உத்தரவு

அனைத்து துறை அலுவலர்களும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமைச்சர் கயல்விழி வலியுறுத்தினார். ஊரக பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதை சரி செய்ய வேண்டும். தீர்வுக்கான ஏற்பாடுகளை தெரிவிக்குமாறு குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். ஊரக பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்

பின்னர் தாட்கோ சார்பில் ஒருவருக்கு தூய்மைப்பணியாளர் நல வாரியத்தின் கீழ் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகைக்கான ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையும், 26 பயனாளிகளுக்கு தூய்மைப்பணியாளர் நல வாரியத்தின் கீழ் அடையாள அட்டைகள், 11 பேருக்கு பிரதம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பில் ஆவின் மற்றும் தாட்கோ இணைந்து வழங்கும் தீவன விதை தொகுப்புகளை அமைச்சர் வழங்கினார்.



Tags:    

மேலும் செய்திகள்