ஆயுத பூஜையை முன்னிட்டு பொரி தயாரிக்கும் பணி தீவிரம்
பரமத்திவேலூர் பகுதிகளில் ஆயுத பூஜையை முன்னிட்டு பொரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பரமத்திவேலூர்
பொரி தயாரிக்கும் பணி
பரமத்திவேலூர் பகுதிகளில் ஆயுத பூஜை பண்டிகை நெருங்கி வருவதால், பொரி விலை கிடு கிடு வென உயர்ந்து வருகிறது. பொரி தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பொரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பரமத்தியை சேர்ந்த துரையன் கூறியதாவது:- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொரி தயார் செய்யப்பட்டாலும், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பகுதியில் தயார் செய்யப்படும் பொரிக்கு, மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு அதிகம்.
பொரி தயாரிப்பதற்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து நெல் வாங்கி வந்து பின் அதை ஊறவைத்து அரிசியாக எடுத்து பெரி தயார் செய்து வந்தோம். தற்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வியாபாரிகளே நேரடியாக அரிசியாக கொண்டு வந்து பொரி தயாரிக்கும் எங்களிடம் விற்பனை செய்கின்றனர். அந்த அரிசி மூலம் பொரி தயார் செய்யப்படுகிறது. பாரம்பரிய முறையில் அடுப்பின் மூலம் நாங்கள் பொரி தயார் செய்து வருகிறோம்.
மூட்டை ஒன்று ரூ.550 வரை
கடந்த ஆண்டு 50 கிலோ கொண்ட பொரி தயாரிக்கும் அரிசி சிப்பம் ஒன்று ரூ.1,750 க்கு வாங்கி வந்தோம். ஆனால் தற்போது 50 கிலோ கொண்ட ஒரு சிப்பம் அரிசி ரூ.2,500-க்கு வாங்கி வருகிறோம். இதன் காரணமாக கடந்த ஆண்டு 50 பக்கா கொண்ட பொரி மூட்டை ஒன்று ரூ.420 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது 50 பக்கா கொண்ட பொரி மூட்டை ஒன்று ரூ.550 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு பொரி அனுப்பப்படுகிறது.
ஆயுத பூஜை பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பரமத்திவேலூர் பகுதியில், பொரி தயாரிப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம், கடந்த ஆண்டை காட்டிலும், தற்போது பொரியின் விலையும் கடும் ஏற்றம் கண்டுள்ளது. மேலும் எந்திர மூலம் பொரி தயார் செய்து வரும் பரமத்தி அருகே உள்ள மரவாபாளையத்தைச் சேர்ந்த அழகர் கூறும்போது: இங்கு உற்பத்தி செய்யப்படும் பொரி நாமக்கல் மாவட்டம் முழுவதும் அனுப்பப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பொரி தரமானதாகவும், உப்பு குறைவாகவும் இருக்கும். கடந்த ஆண்டை விட தற்போது பொரி தயாரிக்கும் அரிசியின் விலை உயர்ந்துள்ளதால் பொரியின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். நவீன எந்திரங்கள் கொண்டு பொரி தயாரிப்பதால் விரைவாகவும், விலையும் குறைவாகவும் மொத்த விற்பனை செய்ய முடிகிறது எனவும் தெரிவித்தார்.
மற்ற பகுதிகளில் தயார் செய்யப்படும் பொரியைக் காட்டிலும் பரமத்தி பகுதியில் தயாராகும் பொரியின் சுவை அலாதியாக இருக்கும் என்பதால் இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொரிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.