"ஓசி பஸ்" முதல் "நீ வாய மூடு வரை"- மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி
மீண்டும் மீண்டும் அமைச்சர் பொன்முடி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சென்னை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட 25-வது வார்டில் புதிதாக ரூ.25.6 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்கா திறப்பு விழாவிற்கு வந்திருந்த உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பூங்காவை திறந்துவைத்தார். அதன் பின்னர் முதல்-அமைச்சர் ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்தநாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த அமைச்சர், ''கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக சென்னையாக இருந்தாலும் சரி, திருக்கோவிலூராக இருந்தாலும் சரி, விழுப்புரமாக இருந்தாலும் சரி வளர்ச்சி அடைந்து வருகிறது'' என பேசிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண், ''எங்கள் பகுதி குறையாக இருக்கிறது'' என தெரிவித்தார். இதனால் கோபமடைந்த அமைச்சர், அவரது வட்டார வழக்கு பேச்சினில், மேடையில் இருந்தபடியே, ''குறையாக இருக்கிறதா? வாயை மூடு'' என ஒருமையில் பேசினார்.
தொடர்ந்து, ''உன் வீட்டுக்காரர் வந்துருக்கறாரா...'' எனக் கேட்க, அதற்கு அந்தப் பெண், ''அவர் போய் சேர்ந்துட்டாரு'' எனக் கூற, ''நல்ல வேளை அவர் போய் சேர்ந்துட்டார்'' என நக்கலகாக பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர், அருகில் இருந்தவர்கள் மற்றும் நிர்வாகிகள் அந்தப் பெண்ணை அமைதிப்படுத்தியதை அடுத்து அமைச்சர் பொன்முடி மீண்டும் பேசத் தொடங்கினார்.
பின்னர், ''நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள் என எனக்குத் தெரிகிறது. ஆயிரம் ரூபாய் எப்போது தருவீர்கள் என்பது தானே'' என்று கூறி, ''அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் விரைவில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்'' எனவும், வருகின்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தெரிவித்தார். இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை ஆக்கியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட அருங்குறுக்கை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, ''நீங்களெல்லாம் அப்படியே ஓட்டு போட்டு கிழிச்சீட்டிங்க...'' என வட்டார வழக்கு மொழியில் பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டும் தனது தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களிடம் உரிமையோடு பேசுகிறேன் என்ற பெயரில், தொகுதிவாசிகளை வசைபாடுவது எந்த விதத்தில் நியாயம் என்கின்றனர் தொகுதிவாசிகள். இதனால் அமைச்சர் பொன்முடி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.