நின்ற லாரி மீது சரக்கு வேன் மோதல்; வடமாநில டிரைவர்-தொழிலாளி பலி

நின்ற லாரி மீது சரக்கு வேன் மோதியதில் வடமாநில டிரைவர்-தொழிலாளி உயிரிழந்தனர்.

Update: 2022-06-16 19:23 GMT

துவரங்குறிச்சி:

லாரி மீது சரக்கு வேன் மோதல்

தூத்துக்குடியில் இருந்து கடலூர் மாவட்டம் பென்னாடத்திற்கு நிலக்கரி சாம்பல் ஏற்றப்பட்ட லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை டிரைவர் தூத்துக்குடியை சேர்ந்த பாபுராஜ் ஓட்டி வந்தார். நேற்று காலை திருச்சி மாவட்டம் வளநாடு அருகே உள்ள சொரியம்பட்டி என்ற இடத்தில் வந்தபோது லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு, டிரைவர் பாபுராஜ் இயற்கை உபாதை கழிக்க சென்றார்.

அப்போது திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி கவர் பிளாக் கல் ஏற்றிச்சென்ற சரக்கு வேன், சொரியம்பட்டியில் வந்தபோது நின்றுகொண்டிருந்த லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

2 பேர் சாவு

இதில் சரக்கு வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியதால், சரக்குவேனை ஓட்டி வந்த டிரைவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அனங்கபிரதான்(வயது 29), அதே மாநிலத்தை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்களான ஜெய்போத்தா(34), சனந்தாபோய்(27) ஆகிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை நீண்டநேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர். இதில் டிரைவர் அனங்கபிரதான், ஜெய்போத்தா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

படுகாயமடைந்த சனந்தாபோய் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்