மத்திய அரசு பணி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மத்திய அரசு பணி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது
விழுப்புரம்
மத்திய அரசு பணிக்கான தேர்வு
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டி தேர்வில் கலந்துகொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தினால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு விதமான பணிக்காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும். இவற்றுக்கு https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 8.10.2022 ஆகும்.
இலவச பயிற்சி வகுப்புகள்
எனவே இத்தேர்விற்கு விண்ணப்பித்த பட்டதாரிகளுக்கு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வருகிற 8.10.2022 முதல் ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இப்போட்டி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடைய விரும்பும் தேர்வுக்கு விண்ணப்பித்த நபர்கள் 7.10.2022-க்குள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி பதிவு செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் இப்பயிற்சி வகுப்புகள் குறித்து கூடுதல் விவரம் தெரிந்துகொள்ள 94990 55906 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம். எனவே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.