மாணவ- மாணவிகளுக்கு இலவச பஸ் சேவை

மாநில அளவிலான கலை போட்டிகளில் பங்கேற்க செல்லும் மாணவ, மாணவிகளுக்கான இலவச பஸ் சேவையை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

Update: 2022-12-27 18:45 GMT

மாநில அளவிலான கலை போட்டிகளில் பங்கேற்க செல்லும் மாணவ, மாணவிகளுக்கான இலவச பஸ் சேவையை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

போட்டிகள்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவில் நடைபெற உள்ள கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்க செல்லும் மாணவ-மாணவிகளுக்காக இலவச பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் சேவையை நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அருண் தம்புராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் மாநில அளவிலான கலை போட்டிகளில் வெற்றி பெற மாணவ, மாணவிகளை வாழ்த்தி, அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாணவர்களின் கலை திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாக கலை போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான போட்டிகள் வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.

இலவச பஸ் சேவை

இதற்காக முதல் கட்டமாக நாகை மாவட்டத்தில் உள்ள 40 பள்ளிகளில் இருந்து 343 மாணவ-மாணவிகள் மதுரை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளார்கள். இவ்வாறு மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்காக நாகையில் இருந்து இலவசமாக பஸ் இயக்கப்படுகிறது என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வைத்தியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்