அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
திருவாரூர் மாவட்டம், புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் சங்கீதா, ஊராட்சி தலைவர் காளிமுத்து, பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் அருண்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் வரவேற்றார். இதில் திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி.கே.கலைவாணன் கலந்து கொண்டு பிளஸ்-1 முடித்த 72 மாணவர்கள், 83 மாணவிகள் என 155 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.
பின்னர் ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா அறிவித்தப்படி பள்ளியில் கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதலிடம் பெற்ற முதல் 3 மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, பரிசினை எம்.எல்.ஏ. வழங்கினார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, பாஸ்கர், தாசில்தார் நக்கீரன், ஊராட்சி துணைத்தலைவர் கார்த்தி, ஊராட்சி செயலாளர் தங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் தலைமையாசியர் ரவி நன்றி கூறினார்.