காயல்பட்டினம் பள்ளிகளில் 261 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
காயல்பட்டினம் பள்ளிகளில் 261 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் பள்ளிகளில் 261 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
சைக்கிள்கள்
காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப்பள்ளியில் 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும், காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா எல். கே. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலதண்டாயுதபாணி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் டாக்டர் முகமது லெப்பை, பள்ளி கல்விக்குழு செயற்குழு உறுப்பினர் எல்.கே.லெப்பை தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் செய்யது அகமது வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு எல்.கே. மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 185 பேருக்கும், சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 76 பேருக்கும் என மொத்தம் 261 இலவச சைக்கிள்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
சமச்சீர் முன்னேற்றம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் எல்லா மாவட்டங்களும் சமச்சீராக முன்னேற வேண்டும் என்பதில் முழுமையான கவனம் செலுத்தி வருகிறார். காயல்பட்டினத்தை பொருத்தவரை மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறீர்கள்.
அரசு மாணவர்களுக்கு சைக்கிள் மட்டும் அல்ல, 11 வகையான நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது. உடற்பயிற்சியோடு மன வளர்ச்சியும் ஏற்பட வேண்டும். இப்பள்ளியில் படித்த மாணவர்கள் பல்வேறு உயர் பதவிகளில் அங்கம் வகித்து வருகிறார்கள். படிப்போடு சேர்த்து உடலையும் பேண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாநில தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், நகரசபை தலைவர் கே.ஏ.எஸ்.முத்து முகமது, துணைத்தலைவர் சுல்தான் லெப்பை, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளரும், நகரசபை கவுன்சிலருமான எஸ்.பி.ஆர்.சுகு, கவுன்சிலர்கள் அபூ, கதிரவன், அல்லாஜ், திருச்செந்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செங்குழி ரமேஷ், காயல்பட்டினம் நகர இளைஞர் அணி செயலாளர் கலீல் ரஹ்மான், திருச்செந்தூர் நகரசபை கவுன்சிலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் திருச்செந்தூர் கல்வி மாவட்ட அதிகாரி நடராஜன் நன்றி கூறினார்.