850 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்-கலெக்டர், எம்.எல்.ஏ. வழங்கினர்

ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 850 மாணவ, மாணவிகளுக்கு ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்களை கலெக்டர் விஷ்ணு சந்திரன், காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்

Update: 2023-08-01 18:45 GMT

ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 850 மாணவ, மாணவிகளுக்கு ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்களை கலெக்டர் விஷ்ணு சந்திரன், காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

விலையில்லா சைக்கிள்

ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். விலையில்லா சைக்கிள்களை வழங்கி கலெக்டர் பேசியதாவது:-

தமிழக அரசின் சிறப்பான திட்டங்களில் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் முக்கியமானது. இதன் மூலம் கிராம பகுதியில் இருந்து மாணவ, மாணவிகள் நகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வந்து சேர முடியும். ஒவ்வொரு மாணவ, மாணவியும் மேற்படிப்பு லட்சியத்தை நிறைவேற்ற இதுபோன்ற திட்டம் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் வழிகாட்டியாகவும், பயனுள்ளதாகவும் அமையும். சைக்கிள் எந்த அளவிற்கு கல்விக்கு பயனுள்ளதாக இருக்குமோ, அதேபோல உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும். எனவே விலையில்லா சைக்கிள் பெறும் மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு பேசினார்.

உயர்கல்வி

விழாவில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது கிராம பகுதி மாணவர்கள் நகர் பகுதிக்கு பள்ளிக்கு வரும் சிரமத்தை கருத்தில் கொண்டு முதன் முதலாக விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கினார். அதன்காரணமாக வசதி படைத்த மாணவர்களுக்கு இணையாக வறுமையில் உள்ள மாணவ, மாணவிகளும் உயர் கல்வி வரை படித்து பயன்பெறும் நிலை உருவாகி உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.கஸ்டாலின் கல்விக்கும், மருத்துவத்திற்கும் உன்னதமான திட்டங்களை வழங்கி பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமான திகழ்ந்து வருகிறார். கல்வி ஒன்று தான் வலிமையான ஆயுதம். அது இருந்தால் எங்கு சென்றாலும் சாதிக்க முடியும். அந்த அளவிற்கு கல்வி நிலையான சொத்தாக இருந்து வருகிறது.

தமிழக அரசு விலையில்லா சைக்கிள் வழங்கி வருகிறது. மாணவ, மாணவிகள் அரசின் திட்டங்களை பெற்று உயர்கல்வி வரை படித்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

விழாவில் 850 மாணவ-மாணவிகளுக்கு ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்களை கலெக்டர் விஷ்ணு சந்திரன், காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, பள்ளி தாளாளர் டாக்டர் பாபு அப்துல்லா, ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணை தலைவர் பிரவீன் தங்கம், ராமநாதபுரம் யூனியன் தலைவர் பிரபாகரன், மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர், பள்ளி தலைமை ஆசிரியர் ஹாஜா மைதீன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்