ரூ.72 ஆயிரம் மோசடி
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே முகநூல் மூலம் பழகி வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.72 ஆயிரம் மோசடி செய்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைதுசெய்தனர்.;
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே முகநூல் மூலம் பழகி வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.72 ஆயிரம் மோசடி செய்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைதுசெய்தனர்.
வாலிபரிடம் பணம் மோசடி
தஞ்சை மாவட்டத்தில் சைபர் குற்றங்களைத் தடுக்கும் நோக்கத்தோடு அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் போலீஸ் நிலையத்தில் வரும் புகார்களுக்கு உடனடியாக வழக்குப்பதிவும் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தஞ்சை மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே உள்ள கள்ளப்புலியூர் சின்னமடை பகுதியை சேர்ந்த வாலிபர் புகார் செய்தார்.
அதில் தன்னிடம் முகநூலின் மூலம் பழகிய 2 பேர், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஆன்லைன் மூலம் பணம் அனுப்புமாறு கூறினர். அதன்படி நான் ரூ.72 ஆயிரம் பணம் அனுப்பினேன். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் அவர்கள் தனக்கு வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி விட்டனர் என கூறி இருந்தார்.
2 பேர் கைது
அதன்பேரில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்ச்செல்வன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவுசெய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக காரைக்குடி ரெயில்வேநிலையம் பின்புறம் உள்ள லெட்சுமி நகரை சேர்ந்த முருகன், தஞ்சை மாவட்டம் ஓரத்தநாடு அருகே உள்ள பாலாயிகுடிக்காடு பகுதியைச் சேர்ந்த சாந்தகுமார் ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 2 செல்போன் மற்றும் டெபிட்கார்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.