3 மடங்கு பணம் தருவதாக பெண்ணிடம் ரூ.7 லட்சம் நூதன மோசடி; பாதிரியார் கைது

தேனியை சேர்ந்த பெண்ணிடம் 3 மடங்கு பணம் தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்த வழக்கில் பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். அவருடைய கூட்டாளியான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-10-24 21:00 GMT

தேனியை சேர்ந்த பெண்ணிடம் 3 மடங்கு பணம் தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்த வழக்கில் பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். அவருடைய கூட்டாளியான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

பாதிரியார்

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் காட்வின் மேஷாக். இவருடைய மனைவி மகாராணி (வயது 42). இவர், பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

நானும், திண்டுக்கல் தாலுகா அலுவலக சாலையை சேர்ந்த பாபுராஜ் மனைவி டெய்சிராணி (47) என்பவரும், சிறு வயதில் மேகமலையில் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வந்தோம். அந்த நட்பின் பேரில், கடந்த 2022-ம் ஆண்டு டெய்சிராணி என்னிடம் அறிமுகமாகி தற்போது திண்டுக்கல்லில் வசிப்பதாக கூறினார்.

அப்போது அவர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த பாதிரியார் ஒருவருக்கு வெளிநாட்டில் இருந்து நிறைய பணம் வந்துள்ளதாகவும், அந்த பணத்தை எடுக்க வேண்டும் என்றால் அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என்றும் கூறினார். அந்த வரியை செலுத்த பணம் கொடுத்தால் பணம் வந்தவுடன் பல மடங்காக திருப்பி தருவதாகவும் கூறினார். அதை நம்பி அவர் கூறிய வங்கிக்கணக்கிற்கு ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் அனுப்பினேன்.

ரூ.7 லட்சம் மோசடி

பின்னர், தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடி அருகே கீழத்திருவிழாப்பட்டியை சேர்ந்த ராபர்ட் (45) அதே பகுதியில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக இருப்பதாகவும், அவருக்கும் வெளிநாட்டில் இருந்து பணம் வந்துள்ளதாகவும், அதற்கும் அரசுக்கு வரி செலுத்த ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்தால் அதை 3 மடங்காக திருப்பிக்கொடுப்பதாக டெய்சிராணி கூறினார். அதை நம்பி ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்தேன். என்னிடம் மொத்தம் ரூ.7 லட்சத்து 15 ஆயிரம் பெற்றுக்கொண்டு பணத்தை திருப்பித் தராமல் மோசடி செய்து விட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

பாதிரியார் கைது

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, மகாராணியை நம்ப வைப்பதற்காக டெய்சிராணி, ராபர்ட் ஆகியோர் பல வழிகளை கையாண்டு இருப்பது தெரியவந்தது. ராபர்ட் வங்கிக்கணக்கில் கோடிக்கணக்கில் பணம் இருப்பது போன்று போலியான குறுஞ்செய்தி, போலியான வங்கிக்கணக்கு ஆவணங்களை உருவாக்கியும், கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டுகளை எண்ணுவது மற்றும் 10-க்கும் மேற்பட்ட பைகளில் ரூ.2,000 நோட்டுகள் வைத்து இருப்பது போன்றும் வீடியோக்களை அனுப்பி வைத்தும் நம்ப வைத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து டெய்சிராணி, பாதிரியார் ராபர்ட் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். அதில் ராபர்ட்டை போலீசார் நேற்று கைது செய்தனர். வீடியோவில் காண்பித்த கட்டுக்கட்டான பணம் குறித்து அவரிடம் போலீசார் விசாரித்தனர். அவை உண்மையான பணமா? கள்ளநோட்டுகளா? அல்லது கலர் ஜெராக்ஸ் நோட்டுகளா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், அந்த பணக்கட்டுகள் குறித்த தகவல்களை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இதில் தொடர்புடைய டெய்சிராணியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்