வீடு கட்டி தருவதாக கூறி ரூ.13¾ லட்சம் மோசடி

வீடு கட்டி தருவதாக கூறி ரூ.13¾ லட்சம் மோசடி

Update: 2023-08-11 20:30 GMT

கோவை

கோவையில் வீடு கட்டி தருவதாக கூறி ரூ.13¾ லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் போலீசில் சிக்கினர்.

வீடு கட்டும் நிறுவனம்

தேனியை சேர்ந்தவர் ராஜசேகர்(வயது 53). இவருடைய மனைவி ஷீபா ராணி(43). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் இம்மானுவேல்(24).

இந்தநிலையில் ராஜசேகர் தனது மனைவி ஷீபா ராணி மற்றும் மகன் இம்மானுவேலுடன் சேர்ந்து கோவை தொண்டாமுத்தூரில் 'தயா பவுண்டேஷன்' என்ற வீடு கட்டி தரும் நிறுவனத்தை நடத்தி வந்தனர். அதில் மேலாளராக பாபு(48) என்பவர் பணியாற்றி வந்தார்.

பணம் வசூல்

இவர்கள் காரமடை, தொண்டாமுத்தூர், குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று குடிசை மற்றும் ஓட்டு வீட்டில் வசிக்கும் ஏழை மக்களை சந்தித்து, புதிய கான்கிரீட் வீடு கட்டி தருவதாகவும், அதற்கு தாங்கள் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் வெளிநாட்டு நிதி உதவி மற்றும் உள்ளூர் சி.எஸ்.ஆர். நிதி உதவி பெற்று தருவதாக தெரிவித்தனர். மேலும் அதற்கு ரூ.52 ஆயிரம் டெபாசிட் செய்ய கூறினர்.

இதை நம்பிய 36 பேர் அந்த நிறுவனத்தில் ரூ.13 லட்சத்து 75 ஆயிரம் டெபாசிட் செய்தனர். தொடர்ந்து அவர்களது குடிசை மற்றும் ஓட்டு வீடு இடிக்கப்பட்டு, புதிய வீடு கட்ட அஸ்திவாரம் போடப்பட்டது.

கைது

ஆனால் அதன்பிறகு எந்த பணிகளும் நடைபெறவில்லை. மேலும் அந்த நிறுவனத்தினரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனா். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர்.

அதில் புதிய வீடு கட்டி தருவதாகவும், இருசக்கர வாகன கடன் பெற்று தருவதாகவும் கூறி அவர்கள் இதுவரை பொதுமக்களிடம் ரூ.1 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. பின்னர் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் அடங்கிய தனிப்படையினர் தேனியில் ஷீபா ராணியையும், கோவையில் பாபுவையும் கைது செய்தனர். தலைமறைவான ராஜசேகர், இம்மானுவேலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்