குளச்சல் அருகே பங்குத்தந்தை பெயரில் ரூ.70 ஆயிரம் மோசடி

குளச்சல் அருகே பங்குத்தந்தை பெயரில் ரூ.70 ஆயிரத்தை மோசடி செய்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-05-01 18:45 GMT

குளச்சல்:

குளச்சல் அருகே பங்குத்தந்தை பெயரில் ரூ.70 ஆயிரத்தை மோசடி செய்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாற்றுத்திறனாளி

குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 52), மீனவர். மாற்றுத்திறனாளியான இவரது உறவினர் ஜூலியஸ் டெல்லியில் ஒரு ஆலயத்தில் பங்குத்தந்தையாக உள்ளார். இவர் அடிக்கடி உறவினரான ஜேம்சிடம் செல்போனில் பேசுவார்.

இந்தநிலையில் நேற்று மாலை பங்குத்தந்தை ஜூலியஸின் முகநூல் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒரு குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளது. குழந்தையின் மருத்துவ செலவுக்கு ரூ.40 ஆயிரம் தேவைப்படுகிறது. உங்களால் உதவ முடியுமா? என கேட்டுள்ளார். இது உண்மை என்று நம்பிய ஜேம்ஸ், மர்ம நபர் அனுப்பிய வேறு ஒரு நபரின் 'கூகுள் பே' செல்போன் எண்ணிற்கு ரூ.40 ஆயிரம் அனுப்பி வைத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட மர்ம நபர் மீண்டும் வேறு உதவிக்கு பணம் வேண்டும் என கேட்டுள்ளார். இதுவும் உண்மை என்று நம்பிய ஜேம்ஸ் மீண்டும் 3 தவணையாக ரூ.30 ஆயிரம் அனுப்பி வைத்தார். மொத்தம் ரூ.70 ஆயிரம் அனுப்பி வைத்த பின்பு பங்குத்தந்தையின் உண்மையான முகநூல் தளத்திலிருந்து ஜேம்ஸிற்கு 'எனது முகநூல்' தளத்தை யாரோ? பயன்படுத்தி பணம் பறிக்கின்றனர். அதனால் பணம் அனுப்ப வேண்டாம் என வாட்ஸ் அப்பில் தகவல் வந்தது. இதன் பின்னர் தான் ஜேம்ஸ் தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என அதிர்ச்சியடைந்தார்.

மர்ம நபரை தேடுகின்றனர்

இதுகுறித்து ஜேம்ஸ் குளச்சல் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரை நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். சைபர் கிரைம் போலீசார் மாற்றுத்திறனாளியிடம் ரூ.70 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

மாற்றுத்திறனாளியிடம் போலி முகநூல் மூலம் பண மோசடி சம்பவம் வாணியக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்