வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.7 லட்சம் மோசடி
வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
என்ஜினீயர்
நெல்லை மாவட்டம் கரிசல்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் டேவிட் தங்கதுரை. இவருடைய மகன் ராஜ்குமார் (வயது 27). என்ஜினீயரான இவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்து உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- அதில் எனது செல்போன் எண்ணுக்கு வெளிநாட்டில் வேலை என்று வந்த குறுஞ்செய்தியை நம்பி சேலம் சூரமங்கலத்தில் உள்ள சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு சென்ற போது அங்கு 3 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது பிரான்ஸ், அயர்லாந்து உள்ளிட்ட பல வெளிநாடுகளில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் சம்பளத்தில் வேலை வாங்கித்தருகிறோம். அதற்கு விசா, விமான கட்டணம் என ரூ.7 லட்சம் கட்ட வேண்டும் என்று கூறினர்.
மோசடி
இதையடுத்து ரூ.5 லட்சம் வங்கி மூலமும், ரூ.2 லட்சம் நேரிலும் கொடுத்தேன். ஆனால் வேலை வாங்கித்தராமல் ஏமாற்றி விட்டனர். பணத்தை திரும்ப கேட்ட போது கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
எனவே வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக பணம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.