வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 23 பேரிடம் தலா ரூ.6 லட்சம் மோசடி

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்து அகதியாக வந்து மண்டபம் முகாமில் தங்கி உள்ளவர் குறித்து மற்றொரு அகதி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

Update: 2023-03-13 18:45 GMT

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்து அகதியாக வந்து மண்டபம் முகாமில் தங்கி உள்ளவர் குறித்து மற்றொரு அகதி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

லட்சக்கணக்கில் பண மோசடி

இலங்கை திரிகோணமலை வெறுகல் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் உள்பட 23 பேர் இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து தப்பி வெளிநாடுகளுக்கு சென்று பிழைக்கலாம் என்று எண்ணி அதே பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரிடம் தலா ரூ.6 லட்சம் வீதம் பணம் கொடுத்து தங்களை ருமேனியா நாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர். இவ்வாறு 23 பேரிடம் தலா ரூ.6 லட்சம் வீதம் பெற்றுக் கொண்ட ஜனார்த்தனன் இவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பாமல் அவர் அங்கிருந்து கள்ளத்தோணியில் பணத்துடன் இந்தியாவுக்கு தப்பி வந்து விட்டாராம்.

அவர் படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்து தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் அகதியாக தங்கி இருக்கிறார். இலங்கையில் லட்சக்கணக்கில் மோசடி செய்துவிட்டு அங்கிருந்து கள்ளத்தோணி மூலம் தப்பி மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி இருக்கும் ஜனார்த்தனன் மீது நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை பெற்று தர வேண்டும் என்று பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்க முடிவு செய்தனர்.

போலீசில் புகார்

இதற்காக இலங்கையில் பணம் கொடுத்து ஏமாந்த ஜெயக்குமார் என்பவர் விமானம் மூலம் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்து மண்டபம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். இலங்கையில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பி அகதிகள் போர்வையில் மண்டபம் முகாமிற்கு பல லட்சம் பணத்துடன் வந்ததாக புகார் அளிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்