பெண்ணிடம் நூதன முறையில் ரூ.3¾ லட்சம் மோசடி
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.3.76 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
விழுப்புரம்
அதிக லாபம்
விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டுசாலை பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண், கடந்த 24-ந் தேதியன்று தன்னுடைய இன்ஸ்டாகிராமை பயன்படுத்திக்கொண்டிருந்தார். அப்போது பகுதி நேர வேலை வொர்க் பிரம் ஹோம் என்று வந்த விளம்பரத்தை பார்த்து அதிலிருந்த விண்ணப்பபடிவத்தை பயன்படுத்தினார்.
உடனே அந்த பெண்ணை தொடர்புகொண்டு பேசிய மர்ம நபர், அவருடைய செல்போனுக்கு ஒரு லிங்கை அனுப்பியுள்ளார். பின்னர் அந்த பெண், அந்த லிங்கிற்குள் சென்றபோது டெலிகிராம் ஐடி மூலம் தொடர்பு கொண்ட நபர், அப்பெண்ணிடம் சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறினார்.
பணம் மோசடி
இதை நம்பிய அப்பெண், ரூ.200 செலுத்தி ரூ.300 ஆக திரும்பப்பெற்றுள்ளார். அதன் பின்னர் 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையிலான நாட்களில், தான் கணக்கு வைத்திருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட கூகுள்பே, யோனா ஆப் மூலம் ரூ.2 லட்சத்து 71 ஆயிரத்தையும், தனது நண்பரின் தனியார் வங்கி கணக்கின் பேடிஎம் மூலம் ரூ.90 ஆயிரத்தையும், தனது தோழியின் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கணக்கின் கூகுள்பே மூலம் ரூ.15 ஆயிரத்து 370-யும் ஆக மொத்தம் ரூ.3 லட்சத்து 76 ஆயிரத்து 370-ஐ 29 தவணைகளாக அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கிகளின் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.
ஆனால் பணத்தைப்பெற்ற மர்ம நபர்கள், டாஸ்க் முடித்த பின்னரும் அப்பெண்ணுக்கு சேர வேண்டிய தொகையை வழங்காமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.