நாகர்கோவில் பெண்ணிடம் ரூ.21½ லட்சம் மோசடி; வெளிநாட்டு ஆசாமிகள் 2 பேர் கைது-டெல்லி சென்று சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

விலை மதிப்புமிக்க பொருட்களை பார்சலில் அனுப்புவதாக கூறி நாகர்கோவில் பெண்ணிடம் ரூ.21½ லட்சம் மோசடி செய்த வெளிநாட்டு ஆசாமிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-17 18:10 GMT

நாகர்கோவில், 

விலை மதிப்புமிக்க பொருட்களை பார்சலில் அனுப்புவதாக கூறி நாகர்கோவில் பெண்ணிடம் ரூ.21½ லட்சம் மோசடி செய்த வெளிநாட்டு ஆசாமிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.21½ லட்சம் மோசடி

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், இணையதளம் மூலமாக என்னிடம் மோசடி செய்து விட்டனர். அதாவது விலை மதிப்புமிக்க பரிசு பொருட்களை பார்சலில் அனுப்பி வைப்பதாகக் கூறி தன்னிடம் ரூ.21 லட்சத்து 50 ஆயிரத்தை வங்கி கணக்கிற்கு அனுப்ப வைத்து ஏமாற்றி விட்டதாக கூறியிருந்தார்.

இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்

உத்தரவிட்டார். அதன்பேரில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வசந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் அஜ்மல் ஜெனிப், பெர்லின் மற்றும் போலீசார் விசாரணை களத்தில் குதித்தனர்.

டெல்லியில் 2 பேர் கைது

விசாரணையில், நாகர்கோவில் பெண்ணிடம் இணையதளம் மூலமாக மோசடி செய்த ஆசாமிகள் ஆப்பிரிக்க நாடுகளான கினியா நாட்டைச் சேர்ந்த பாஸ்கல் பாங்கவுரா (வயது 36), நைஜீரியா நாட்டைச் சேர்ந்த மோர்ட்டின் டாபரே (24) என்பதும், இருவரும் டெல்லியில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் டெல்லிக்கு சென்று ரகசியமாக 2 பேரையும் கண்காணித்து வந்தனர்.

டெல்லியில் துவாரகா மாவட்டத்தில் பதுங்கியிருந்தபோது குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் 2 பேரையும் சுற்றி வளைத்துப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி குமரி மாவட்டத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், இவர்கள் 2 பேரும் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ.21½ லட்சம் மோசடி செய்ததும், இதேபோல் நாடு முழுவதும் ஏராளமானோரிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்திருப்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 22 செல்போன்கள், 26 சிம்கார்டுகள், 16 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

புழல் சிறையில்...

பின்னர் 2 பேரையும் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ஆசாமிகள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையில் உள்ள புழல் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

நாகர்கோவில் பெண்ணிடம் மோசடி செய்த பணம் ரூ.21½ லட்சம் கைதான நபர்களின் வெளிநாட்டு வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டு இருப்பதால் அந்த பணத்தை மீட்க அரசு மூலம் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்