தக்கலை அருகே கட்டிட காண்டிராக்டரிடம் ரூ.2½ லட்சம் மோசடி
தக்கலை அருகே கட்டிட காண்டிராக்டரிடம் ரூ.2½ லட்சம் மோசடி செய்த பட்டதாரி இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.;
தக்கலை அருகே உள்ள குமாரபுரம் கன்றுபிலாவிளை பகுதியை சேர்ந்தவர் ரெஜிலின் மனோ (வயது 35). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி அஜி (32) பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவருடைய தாயாரிடம் தக்கலைக்கு செல்வதாக கூறி விட்டு 2 குழந்தைகளையும் அஜி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் வீட்டுக்கு வரவில்லை.
இதுகுறித்து அஜியின் தாயார் கொற்றிக்கோடு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜியை தேடி வந்தனர். இதனை அறிந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என 20-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். அப்போது நகை, பணத்தை வாங்கி விட்டு அஜி திடீரென தலைமறைவாகி விட்டதாக போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். மேலும் அஜிக்கு அவருடைய நண்பர் ரெதீஸ் என்பவரும் உதவியாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே நேற்று அஜி மீது அவருடன் கல்லூரியில் படித்த முதலார் பகுதியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் கிங்ஸ்லி (34) என்பவரும் புகார் கொடுத்தார். அதில், வங்கியில் அடமானம் வைத்த நகைகளை மீட்காததால் ஏலத்திற்கு வந்துள்ளது. ஆகவே நகையை மீட்க பணத்தை கடனாக தந்தால் திருப்பி தருவதாக என்னிடம் அஜி கூறினார்.
இதனை நம்பி 3 தடவையாக ரூ.2 லட்சத்து 43 ஆயிரத்து 500-ஐ கூகுள்பே மூலமாக அனுப்பினேன். பின்னர் கடனை திருப்பிக் கேட்ட போது அஜி ஏதாவது ஒரு காரணம் கூறி ஏமாற்றி வந்தார். இந்தநிலையில் அவர் திடீரென தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டிருந்தது.
பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல் வெளியானது. அதாவது அஜி மகளிர் சுயஉதவிக்குழு தலைவியாக இருந்துள்ளார். அதனை வைத்து பெண்களுடன் இனிப்பாக பேசி பழகியுள்ளார். பின்னர் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அவர்களிடம் வாங்கி நிறுவனத்தில் கடன் வாங்கி மோசடி செய்ததாகவும், இதில் அவருக்கு ரெதீஸ் உதவியதாக இருந்ததும் தெரியவந்தது. மேலும் சிலரிடம் நகையையும் வாங்கி திருப்பிக் கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் அஜி மோசடி செய்த பணம் எவ்வளவு என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
பின்னர் போலீசார் அஜி, ரெதீஸ் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடிவந்தனர். இந்தநிலையில் முட்டைக்காட்டில் அஜி நிற்பதாக இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சாமுவேல் மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து அஜியை பிடித்து கைது செய்தனர். ரெதீஸை தேடிவருகின்றனர்.