போலி ஆவணம் மூலம் வங்கியில் ரூ.1 கோடி கடன் பெற்று மோசடி

போலி ஆவணம் மூலம் வங்கியில் ரூ.1 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட கணவன்-மனைவி உள்பட 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-30 10:14 GMT

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் உதவி பொது மேலாளராக இருப்பவர் சேதுராமன். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார்.

அதில், 'சென்னை நங்கநல்லூர் டெலிகிராப் காலனியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 49), மேடவாக்கம் பாபு நகர், 3-வது மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (51), அவரது மனைவி முத்து லட்சுமி (46) ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் வீட்டுக்கடன் பெற்று ரூ.1 கோடிக்கு மேல் ஏமாற்றிவிட்டனர். அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, ஏமாற்றி வாங்கிய கடன் பணத்தை மீட்டுத் தரவேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.

இந்த புகார் மீது சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்கள். இதில், போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் வீட்டுக்கடன் வாங்கி மோசடி அரங்கேறி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் விசாரணையில், கைதான ஜெகநாதன், முத்துலட்சுமி, ராஜேஸ்வரி ஆகிய 3 பேரும் இதேபோன்று போலியான ஆவணங்களை கொடுத்து பாரத ஸ்டேட் வங்கியின் வெவ்வேறு கிளைகளில் வீட்டு கடன்கள் பெற்று வங்கியை ஏமாற்றி தலைமறைவாகி விடுவது வழக்கம் என்பது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்