கல்வி-வேலைவாய்ப்பில் நரிக்குறவ இனத்தவருக்கு உடனே சலுகை வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்
கல்வி-வேலைவாய்ப்பில் நரிக்குறவ இனத்தவருக்கு உடனே சலுகை வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய அரசிதழில், 1950-ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்ட திருத்தம் (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) சம்பந்தமாக, தமிழ்நாடு மாநிலத்தில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பட்டியலை மாற்றியமைப்பதற்கான அரசியலமைப்பு ஆணை (இரண்டாவது திருத்த) சட்டம், 2022 சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
பட்டியலிடப்பட்ட பழங்குடியின மக்களுக்கான திருத்தப்பட்ட மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இப்படி நிறைவேற்றப்பட்ட மசோதாவானது சட்டமாக நிறைவேற்றப்பட்டு, இந்திய அரசிதழில் வெளிவந்தால் அது நடைமுறைப்படுத்தப்படும்.
அந்த வகையில் நிறைவேற்றப்பட்ட மசோதா இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, ஒப்புதலாகி, இந்திய அரசிதழில், அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. இது நரிக்குறவர்கள் என்கின்ற குருவிக்கார இன மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு கிடைத்திருக்கின்ற வெற்றியாகும்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் உள்ள நரிக்குறவர் என்கின்ற குருவிக்கார இன மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அவர்களுக்கான அரசின் அனைத்து சலுகைகளையும் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்