நான்கு வழிச்சாலையாக மாற்றம்: மரங்கள் வேரோடு தோண்டி எடுத்து மறுநடவு

நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுவதால் மரங்களை வெட்டாமல் வேரோடு தோண்டி எடுத்து மறுநடவு செய்யப்பட்டது.

Update: 2022-08-31 14:24 GMT

பொள்ளாச்சி

நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுவதால் மரங்களை வெட்டாமல் வேரோடு தோண்டி எடுத்து மறுநடவு செய்யப்பட்டது.

மரங்கள் மறுநடவு

பொள்ளாச்சி- பல்லடம் ரோடு வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் பொள்ளாச்சியில் இருந்து புளியம்பட்டி வரை நான்கு வழிசாலை அமைக்கப்பட்டு உள்ளது. ராசக்காபாளையத்தில் மட்டும் இருவழிச்சாலையாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் விபத்துகளை தடுக்க இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. இதற்காக சாலை பணிக்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெற்றது. இதற்கிடையில் மறுநடவு செய்வதற்கு வாய்ப்பு உள்ள மரங்களின் கிளைகள் மட்டும் வெட்டப்பட்டது. இந்த நிலையில்  அந்த மரங்கள் வேரோடு தோண்டி மறுநடவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அதற்கு தேவையான மருந்துகளும் வைக்கப்பட்டன. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ரூ.2 கோடியில் சாலை பணி

ராசக்காபாளையத்தில் ½ கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.2 கோடியில் இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. சாலை பணிக்கு இடையூறாக 31 மரங்கள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. இதில் 12 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு உள்ளன. மீதமுள்ள 19 மரங்கள் வேரோடு தோண்டி மறுநடவு செய்யப்படுகிறது. சரக்கொன்றை, வேம்பு, புங்கன், மஞ்சகொன்றை, இலுப்பை, ஆலமரம் ஆகிய வகை மரங்கள் மறுநடவு செய்யப்பட உள்ளது.

நெடுஞ்சாலைத்துறை, மரங்களுக்கு மறுவாழ்வு அமைப்பு சார்பில் இன்று (நேற்று) 3 மரங்கள் வேரோடு தோண்டி எடுத்து அதே பகுதியில் உள்ள கோவில் வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சரக்கொன்றை, புங்கன் வகை மரங்கள் கோவில் வளாகத்தில் நடப்பட்டது. இந்த மரத்தை பொதுமக்கள் பராமரிப்பதாக கூறி உள்ளனர். மேலும் சாலை அகலப்படுத்தும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்