மயிலாடுதுறையில் ரூ.37 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்ட ஜூலை மாதத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுவார் ராஜகுமார் எம்.எல்.ஏ. தகவல்
மயிலாடுதுறையில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்ட ஜூலை மாதத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுவார் என ராஜகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.
மயிலாடுதுறை:-
மயிலாடுதுறையில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்ட ஜூலை மாதத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுவார் என ராஜகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.
புதிய பஸ் நிலையம்
மயிலாடுதுறை நகரில் புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். புதிய பஸ் நிலையம் கட்டுவதற்காக மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் 10 ஏக்கர் நிலம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டது.
இங்கு புதிய பஸ் நிலையம் ரூ.37 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த நிலையில் புதிய பஸ் நிலையம் அமைய உள்ள மணக்குடி கிராமத்தில் ராஜகுமார் எம்.எல்.ஏ., நகரசபை தலைவர் செல்வராஜ், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சனல்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுவார்
அப்போது எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறுகையில், 'மயிலாடுதுறை நகரில் புதிய பஸ் நிலையம் அமைக்க ரூ.37 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதில் ரூ.19 கோடி அரசு மானியமாகவும், மீதம் கடன் பெறவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
முதல் கட்டமாக ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடம் முழுமையாக நில அளவை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த மாதத்துக்குள் நிலத்துக்கான பத்திரப்பதிவு நிறைவடைந்து, அடுத்த மாதத்தில் (ஜூலை) தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய பஸ் நிலையம் கட்ட அடிக்கல் நாட்டுவார்' என்றார்.
ஆய்வின்போது நகரமைப்பு அலுவலர் ராஜேந்திரன், நில அளவை அலுவலர் தர்மராஜ் மற்றும் அலுவலர்கள், நகரசபை உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.