முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பாவீடு மீது 15 பேர் கும்பல் தாக்குதல்
தூத்துக்குடியில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா வீடு மீது 15 பேர் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தூத்துக்குடியில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா வீடு மீது 15 பேர் கொண்ட கும்பல் திடீரென்று தாக்குதல் நடத்தியது. இதில் நாற்காலி-கார் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.
பா.ஜனதா துணைத்தலைவர்
பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவராக இருப்பவர் சசிகலா புஷ்பா. இவர் தூத்துக்குடி மாநகராட்சி மேயராகவும், எம்.பி.யாகவும் இருந்துள்ளார். இவரது வீடு தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் உள்ளது.
நேற்று முன்தினம் தூத்துக்குடியில் பா.ஜனதா கட்சி சார்பில் நடந்த விழாவில் சசிகலா புஷ்பா கலந்து கொண்டார். பின்னர் அவர் நாகர்கோவிலுக்கு சென்று விட்டார்.
தாக்குதல்
இந்த நிலையில் நேற்று மதியம் தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் உள்ள சசிகலா புஷ்பா வீட்டுக்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 ஆட்டோக்களில் சுமார் 15 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்தது. இந்த கும்பல் திடீரென வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி தாக்கினர். இதில் வீட்டின் முன்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த கார் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தன. ஜன்னல், பூந்தொட்டி மற்றும் முன்பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் நாற்காலிகளையும் மர்ம கும்பல் சூறையாடியது. பின்னர் அந்த கும்பம் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் அங்கு திரண்டனர். தூத்துக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வலைவீச்சு
இதற்கிடையே, பா.ஜனதா பிரசாரப்பிரிவு மாவட்ட செயலாளர் ரத்தினராஜ் என்ற கனி, சிப்காட் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில், 2 ஆட்ேடாக்கள், மோட்டார் சைக்கிள்களில் வந்த தி.மு.க.வினர் சிலர், சசிகலா புஷ்பாவின் வீட்டின் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் நாற்காலிகள் மற்றும் கார், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. இதை அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த போது, அவர்கள் தெரிவித்து உள்ளனர். ஆகவே, அவரது வீட்டில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டு உள்ளது.
இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
தூத்துக்குடியில் முன்னாள் எம்.பி. வீடு மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.