வார்டுகளில் நிலவும் மக்களின் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காணமுடியும்

பகுதி சபை கூட்டம் மூலம் வார்டுகளில் நிலவும் மக்களின் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காணமுடியும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

Update: 2022-11-01 18:45 GMT

வெளிப்பாளையம்:

பகுதி சபை கூட்டம் மூலம் வார்டுகளில் நிலவும் மக்களின் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காணமுடியும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

பகுதி சபை கூட்டம்

நாகை நகராட்சியின் 30-வது வார்டில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு பகுதி சபை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் மாரிமுத்து வரவேற்றார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை நகராட்சி வார்டு எண் 30-ல் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பகுதி உறுப்பினர்களை கலெக்டர் அருண்தம்புராஜ் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் உத்தரவின்படி நாகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளும், 4 பகுதியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும், 4 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கிராம சபை கூட்டம் கிராமங்களில் நடத்தப்பட்டு அங்குள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்துவது போல் நகர பகுதிகளில் வார்டு சபை, பகுதி சபை கூட்டம் நடத்த அரசு ஆணை வெளியிடப்பட்டு நடத்தப்படுகிறது.

அரசியல் உள்நோக்கம்

புதிதாக தேர்வு செய்யப்பட்ட வார்டு பிரதிநிதிகள் தங்கள் பகுதி வார்டுகளில் உள்ள பொதுமக்களின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலரிடம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கப்பட்ட பிரச்சினைகள் மீது காணப்பட்ட தீர்வுகள் குறித்து 3 மாத காலத்திற்கு ஒரு முறை தங்களது வார்டு கவுன்சிலர் தலைமையில் கூட்டம் நடத்த வேண்டும். இதனால் வார்டுகளில் நிலவும் பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு காணமுடியும்.

இதை இந்த பகுதி, வார்டு பிரதிநிதிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு தங்களது வார்டு நல்ல முன்னேற்றம் அடைய முயற்சி செய்ய வேண்டும். அரசியல் உள்நோக்கம் இன்றி பொதுமக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

வடிகால் வசதி

மழை காலம் தொடங்கி விட்டதால் தங்களது வார்டுகளில் வடிகால் வசதி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு பள்ளிக்கு தேவையான வசதி, தங்கள் குழந்தை படிக்கும் பள்ளியின் தேவைகள் குறித்து விவாதம் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

முடிவில் நகராட்சி பொறியாளர் ஜெயகிருஷ்ணன் நன்றி கூறினார். இதை தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு குறித்து 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கவுன்சிலர்கள் திலகர், முகமமதுநத்தர், சுபஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்