முதல் முறையாக பாமாயில் இறக்குமதி குறைகிறது

கடந்த பல ஆண்டுகளில் முதல் முறையாக பாமாயில் இறக்குமதி குறைகிறது

Update: 2023-04-24 19:13 GMT

சமையல் எண்ணெய் இறக்குமதியாளர்கள் பாமாயில் இறக்குமதி செய்வதற்கு தயக்கம் காட்டும் நிலையில் 75 ஆயிரம் டன் பாமாயில் இறக்குமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமையல் எண்ணெய் இறக்குமதியாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி ரத்து

இதுகுறித்து இறக்குமதியாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேசிய அளவில் சமையல் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய 65 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் 80 சதவீதம் பாமாயில் பங்கு வகிக்கிறது.

கடந்த காலங்களில் சமையல் எண்ணெய் இறக்குமதியில் பாமாயில் இறக்குமதியை 5 ஆயிரம் டன் முதல் 10 ஆயிரம் டன் வரை ரத்து செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த பல ஆண்டுகளில் முதல் முறையாக தற்போது 75 ஆயிரம் டன் பாமாயில் இறக்குமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

குறைய தொடங்கியது

இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இந்தோனேசியா அரசு பாமாயில் இறக்குமதிக்கான நிபந்தனைகளை கடுமையாக்கியதன் விளைவாக பாமாயில் இறக்குமதியாளர்கள் தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் இறக்குமதியில் ஆர்வம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி அதிகரிப்பால் உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மத்திய அரசு ஏற்றுமதிக்கான சலுகைகளை நீடித்தாலும் பாமாயில் ஏற்றுமதி செய்யும் இந்தோனேசிய அரசு விதிமுறைகளை கடுமையாக்கியதால் பாமாயில் இறக்குமதி குறைய தொடங்கியுள்ளது.

பாதிக்கும்

உலக அளவில் சமையல் எண்ணெயில் பாமாயிலை அதிக அளவில் இறக்குமதி செய்யும் இந்தியா அதனை குறைக்க தொடங்கியுள்ளதால் மலேசியா போன்ற நாடுகளில் பாமாயில் விலைகளில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும் உள்ளூர் சந்தையில் பாமாயில் அளவிற்கு சூரியகாந்தி மற்றும் சோயாபீன் எண்ணெய்கள் விற்பனையாவதற்கு வாய்ப்பில்லை. மேலும் கச்சா பாமாயில் விலையும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு குறையவில்லை. இவ்வாறு சமையல் எண்ணெய் இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்