சமையல் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

அண்ணன்-தம்பியை மதுபாட்டிலால் குத்திய சமையல் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்செந்தூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2022-12-22 18:45 GMT

திருச்செந்தூர்:

அண்ணன்-தம்பியை மதுபாட்டிலால் குத்திய சமையல் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்செந்தூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சமையல் தொழிலாளி

தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூர் தைக்கா தெருவைச் சேர்ந்தவர் அப்துல்காதர். இவருடைய மகன்கள் ரகுமத்துல்லா (வயது 45), கலீல் ரகுமான் (42). இவர்கள் சமையல் தொழில் செய்து வருகின்றனர்.

வடக்கு ஆத்தூர் மேல தெருவைச் சேர்ந்தவர் ஹமீது (47). சமையல் தொழிலாளியான இவர் கடந்த 2012-ம் ஆண்டு சமையல் வேலைக்கு வருவதாக கூறி ரகுமத்துல்லா, கலீல் ரகுமான் ஆகியோரிடம் ரூ.2 ஆயிரம் முன்பணம் வாங்கினார். பின்னர் ஹமீது வேலைக்கு செல்லவில்லை.

அண்ணன்-தம்பிக்கு பாட்டில் குத்து

இதையடுத்து கடந்த 26.10.2012 அன்று ரகுமத்துல்லா, கலீல் ரகுமான் ஆகியோர் ஹமீதுவிடம் முன்பணத்தை திருப்பி தருமாறு கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஹமீது மதுபாட்டிலை உடைத்து ரகுமத்துல்லாவின் தலை மற்றும் வயிற்றில் குத்தினார்.

இதனை தடுக்க முயன்ற கலீல் ரகுமானின் கழுத்திலும் மதுபாட்டிலால் குத்தினார். மேலும் அவர்களை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்தார்.

10 ஆண்டு சிறை தண்டனை

இதுகுறித்து ஆத்தூர் வழக்குப்பதிவு செய்து ஹமீதுவை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்செந்தூர் உதவி அமர்வு கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி வஷித்குமார் நேற்று தீர்ப்பு வழங்கினார். அண்ணன்-தம்பியை கொலை செய்ய முயன்ற ஹமீதுவுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் கொலைமிரட்டல் விடுத்ததற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும், சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்குமாறும் தீர்ப்பு கூறினார்.

அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்குமாறும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் பாரி கண்ணன் ஆஜரானார்.

---

Tags:    

மேலும் செய்திகள்