பரமத்திவேலூர்
பரமத்திவேலூரில் இருந்து பொத்தனூர் செல்லும் சாலையில் ராஜகணபதி கோவில் உள்ளது. தற்போது மாநில நெடுஞ்சாலை துறை மூலம் பொத்தனூர் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதால் வடிகால் வசதிக்காக சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் சாலையோரத்தில் மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ராஜகணபதி கோவிலை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்தனர். இந்தநிலையில் நேற்று மாநில நெடுஞ்சாலை துறை பரமத்திவேலூர் சாலை ஆய்வாளர் சங்கர் முன்னிலையில் சாலை பணியாளர்கள் உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் ராஜகணபதி கோவில் முற்றிலுமாக அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்தனர். மேலும் பொதுமக்கள் முன்னிலையில் ராஜகணபதி சிலையை பொக்லைன் எந்திரம் மூலம் பாதுகாப்பாக எடுக்கப்பட்டு அதே பகுதியில் புதிதாக கோவில் அமைக்கப்பட உள்ள பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சாலை விரிவாக்க பணிக்காக பொத்தனூர் சாலையில் எம்.ஜி.ஆர். சிலை வரை முதற்கட்டமாக சாலையோரத்தில் உள்ள புளியமரங்கள் அகற்றப்பட உள்ளதாக சாலை ஆய்வாளர் சங்கர் தெரிவித்தார்.