கோவில்பட்டி நகர வளர்ச்சிக்கு எம்.எல்.ஏ. நிதி ஒதுக்க நகரசபை தலைவர் கோரிக்கை

கோவில்பட்டி நகர வளர்ச்சிக்கு எம்.எல்.ஏ. நிதி ஒதுக்க நகரசபை தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-07-05 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகரசபை தலைவர் கா.கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவில்பட்டி நகரசபையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சாலைப்பணிகளுக்கு ரூ.31 கோடி நிதி ஒதுக்கியதாகவும், அதற்கான சாலை பணிகளை மேற்கொள்ளாமல், தற்போதைய நகரசபை நிர்வாகம் ரத்து செய்து விட்டதாகவும் அக்கட்சி சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து வருகின்றனர். கோவில்பட்டி நகரசபையில் 275 சாலைகளை சீரமைக்க கடந்த ஆட்சியில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ரூ.31 கோடி கடனாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், கோவில்பட்டி நகரசபையிலுள்ள 137 சாலைப்பணிகளில் 60 சாலைகளை சீரமைக்க மானியத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலை பணிகளையும் எங்களால் செய்ய முடியவில்லை. ஏனென்றால் 2-வது குடிநீர் திட்டப்பணிகள் முழுமையாக முடிவடைய வில்லை. மேலும் அ.தி.மு.க.ஆட்சியில் வாங்கிய ரூ.31 கோடி கடனுக்கு, தற்போது வரக்கூடிய 15-வதுநிதிக்குழு தொகையை அப்படியே எடுத்து விடுகின்றனர். ஆண்டுக்கு நகரசபையின் வருமானம் ரூ.6 கோடி தான். ஆனால், அலுவலர்கள், ஊழியர்களுக்கு சம்பளமாக ரூ.12 கோடி வழங்க வேண்டிய நிலை உள்ளது. மண் சாலைகள் அனைத்தும் மாற்றப்பட்டு விட்டன. அ.தி.மு.க.வினர் குடிநீர் குழாயை முறையாக பதித்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது. தற்போது 2-வது குடிநீர் குழாய் பணிகளுக்கு ரூ.2 கோடி தேவைப்படுகிறது. அதற்கு நகராட்சியில் நிதி இல்லை. எனவே, தொகுதி எம்.எல்.ஏ. கோவில்பட்டி நகரின் வளர்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கீடு செய்து உதவ வேண்டும், என்றார். அவருடன் தி.மு.க. நகர அவை தலைவர் முனியசாமி, சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்