சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபருக்கு25 ஆண்டுகள் சிறை தண்டனை
சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை
தஞ்சை அருகே 17 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சிறுமியுடன் காதல்
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள திங்களூரைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மகன் கோபிநாத்(வயது 25). ஐ.டி.ஐ. படித்துள்ளார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். அந்த சிறுமியிடம் நெருங்கி பழகி அவரை கர்ப்பமாக்கினார்.
இந்த நிலையில் சிறுமி கர்ப்பமாக இருக்கும் தகவலை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இரு தரப்பு பெற்றோரும் பேச்சுவார்த்தை நடத்தி இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் திருமணம் முடிந்து 3 நாட்களுக்கு பின்னர் கோபிநாத் வேலை தேடி வெளியூருக்கு சென்றார். அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லை.
குழந்தை பிறந்து இறந்தது
இந்த நிலையில் அந்த சிறுமிக்கு 8 மாதங்களில் குழந்தை பிறந்து இறந்தது. இது குறித்து சிறுமி கணவர் வீட்டாரிடம் தெரிவித்தபோது அவர்கள், அந்த சிறுமியை வீட்டை விட்டு துரத்தி விட்டுள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த சிறுமி திருவையாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் அப்போதைய இன்ஸ்பெக்டர் சுகுணா வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்தார்.
25 ஆண்டுகள் சிறை தண்டனை
இது தொடர்பான வழக்கு தஞ்சை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி ஜி. சுந்தரராஜன், கோபிநாத்துக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.