தூத்துக்குடியில்உணவு பாதுகாப்பு உரிமம், பதிவுச் சான்றிதழ் சிறப்பு முகாம்

தூத்துக்குடியில்உணவு பாதுகாப்பு உரிமம், பதிவுச் சான்றிதழ் சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2022-11-08 18:45 GMT

தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச்சான்றிதழ் பெறுவதற்கான சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார்.

சிறப்பு முகாம்

உணவுப் பொருட்களை தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் இன்றி உணவுத் தொழில் புரிய கூடாது. இதனால் மாவட்டத்தில் உள்ள உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுசான்றிதழ் பெறுவதற்காக சிறப்பு முகாம் தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. முகாமுக்கு தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமை தாங்கினார். அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க தலைவர் தமிழரசு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1346 உணவு வணிகர்கள் உள்ளனர். இது மாநிலத்தின் மற்ற மாவட்டங்களைவிட மிக அதிகம். அதிக உணவு வணிகர்களைக் கொண்டுள்ளதால் அந்த வணிகர்கள் சுய இணக்கமாக உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்று நுகர்வோர்களுக்கு பாதுகாப்பான உணவைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த முகாம் நடக்கிறது. எனவே வணிகர்கள் இதனை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை தவிர்க்க இயலாது. தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஓவ்வொரு பகுதியும் அங்குள்ள வணிகர்களால்தான் வளம்பெறும்.

100 சதவீதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில்கள் வளர்வதற்கும், அதன்மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதற்கும் அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கம் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து உள்ளது. உங்களது பொருட்களுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று பதிவு செய்தால் ஏற்றுமதி செய்ய முடியும். வாடிக்கையாளர்களும் நம்பிக்கையுடன் வாங்குவார்கள். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழ்நாட்டிலேயே முதல் மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை 100 சதவீதம் உணவு வணிகர்கள் உரிமத்துடன் செயல்படும் மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க முன்னாள் தலைவர் ஜோ பிரகாஷ், துணைத்தலைவர் சுரேஷ்குமார், இணை செயலாளர் ரமேஷ், செயற்குழு உறுப்பினர் பாலசங்கர், உறுப்பினர் ரமேஷ், தூத்துக்குடி மாநகர உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சக்திமுருகன், காளிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்