மண்வெட்டியால் சாதத்தை கிளறி பக்தர்களுக்கு அன்னதானம்
மண்வெட்டியால் சாதத்தை கிளறி பக்தர்களுக்கு அன்னதானம்
ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவில் பின்புறம் கண்மாய்கரையில் கோவிந்த பெருமாள் கோவில் உள்ளது. மதுரை சித்திரை திருவிழா நிறைவடைந்து கோவிலுக்கு கள்ளழகர் இருப்பு நிலைக்கு சென்றடைவார். அதனைதொடர்ந்து திருஉத்தரகோசமங்கை கோவிந்த பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தலுகை விழா நடப்பது வழக்கம். இதன்படி நேற்று மூலவர் கோவிந்த பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை முதல் இரவு வரை பல ஆயிரம் பேர் உணவருந்தும் வகையில் அன்னதானம் நடந்தது. கடந்த காலங்களில் கோவிலில் சோறு சமைத்து அதனை ஓலைப்பாயில் கொட்டி மண்வெட்டியால் கிளறி பக்தர்களுக்கு பரிமாறப்படுவது வழக்கம். அதேபோல சோறு சமைத்து மண்வெட்டியால் கிளறி பரிமாற தொடங்கினர். அந்த பகுதியில் சாலையின் இருபுறமும் பக்தர்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து சாப்பிட்டனர். இதுகுறித்து விழா குழுவினர் கூறியதாவது:-
கடந்த140 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களது முன்னோர்கள் மூலம் பல தலைமுறைகளாக இந்த தலுகை விழா கொண்டாடி வருகிறோம். சித்திரைத் திருவிழாவின் நிறைவாக 10 ஆயிரம் பேருக்கு இங்கு அன்னதானம் வழங்குகிறோம். விவசாய நிலத்தில் சேறு கிளற உதவுவது மண்வெட்டி என்பதால் அதை நினைவு கூறும் வகையில் சோறு கிளறுவதற்கு மண்வெட்டியை பயன்படுத்துகிறோம். மண்வெட்டியை கோவிந்த பெருமாளின் அருகே வைத்து சிறப்பு பூஜைக்கு பின்பு பயன்படுத்துகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.