கருக்கலைப்பு மாத்திரைகள் இலவசமாக வினியோகம்

கருக்கலைப்பு மாத்திரைகள் இலவசமாக வினியோகம்

Update: 2023-07-12 13:01 GMT

திருப்பூர்

பாதுகாப்பான முறையில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது என்று குடும்ப நல துணை இயக்குனர் கவுரி தெரிவித்துள்ளார்.

கருக்கலைப்பு மாத்திரைகள்

மருத்துவர்களின் பரிந்துரையில்லாமல் கருக்கலைப்பு மாத்திரை விற்பனை செய்யும் மருந்துக்கடைகளினால் கர்ப்பிணிகளுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும். இதை தவிர்ப்பதற்காக அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பான கருக்கலைப்பு முறைகள் குறித்து அரசு பயிற்சி அளித்துள்ளது. கருக்கலைப்பு மாத்திரைகள் பாதுகாப்பான முறையில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் சட்டத்துக்கு உட்பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த சேவைகள் குறித்த தகவல் மற்றும் கல்வி தொடர்பு சாதனங்கள் அனைத்து மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த இலவச சேவையை பயன்படுத்தி குடும்ப நலத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் கவுரி தெரிவித்துள்ளார்.

மருந்தகங்கள் மீது நடவடிக்கை

மருத்துவரின் பரிந்துரையின்றி கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனகராணி தெரிவித்துள்ளார்.

அரசின் ஆணையை மீறி கருக்கலைப்பு மாத்திரைகள் வினியோகம் செய்யும் மருந்தகங்கள் மற்றும் போலி மருத்துவர்கள் மீது இணை இயக்குனர் தலைமையிலான மருத்துவக்குழு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த குற்றங்களுக்கு தண்டனை, அபராதம் விதித்தல், சிறை தண்டனை மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும். பாதுகாப்பான கருக்கலைப்பு குறித்த அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

--------

Tags:    

மேலும் செய்திகள்