கால்நடை தீவனத்துக்கு ஏற்ற சோள ரகம் சாகுபடி
கால்நடை தீவனத்துக்கு ஏற்ற சோள ரகம் சாகுபடி
போடிப்பட்டி
குடிமங்கலம் வட்டாரத்தில் தானியம் மற்றும் கால்நடைத் தீவனத்துக்கு ஏற்ற சோள ரகங்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ஆதார நிலை விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு
உணவே மருந்து என்னும் வகையில் நம் முன்னோர்களால் பல ஆயிரம் வருடங்களாக சோளம், கம்பு, ராகி, சாமை, தினை, வரகு, பனி வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு பிரதான உணவாக உட்கொள்ளப்பட்டது.அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் பங்கு முதன்மையானதாகும்.காலப்போக்கில் மக்களின் வாழ்வியல் முறை, சுற்றுச்சூழல், துரித உணவுகள், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்டவற்றால் சிறுதானியங்களின் சாகுபடி பெருமளவில் குறைந்தது.ஆனால் சமீப காலங்களாக மக்களிடையே பெரும் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. தற்போது மக்களின் மாறிவரும் உணவுப் பழக்க வழக்கம், உணவு முறைகள் குறித்த விழிப்புணர்வு, சிறுதானியங்கள் சந்தைப்படுத்துதல், மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதாக கிடைத்தல் உள்ளிட்ட காரணங்களால் சிறுதானிய சாகுபடி அதிகரித்து வருகிறது.இதில் சோளம் பிரதான சிறுதானியப் பயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
புதிய ரகங்கள்
கொங்கல் நகரம் மற்றும் கோட்டமங்கலம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோளம் கோ 32 ஆதார ரக விதைப் பண்ணைகளில் திருப்பூர் மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டார்.அந்த ஆய்வின் போது அவர் கூறியதாவது'பிற சிறு தானியங்களை ஒப்பிடும்போது சோளத்தில் அதிக அளவு புரதச்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் ஏராளமான நார்ச்சத்துக்களும் உள்ளன.ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் செரிமானத்துக்கு உகந்தது.இதிலுள்ள ஊட்டச் சத்துக்களின் பயன்கள் மக்களை முழுமையாக சென்றடையும் வகையிலும், தானிய மற்றும் தீவனத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும் பல்வேறு புதிய சோள ரகங்கள் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
குடிமங்கலம் வட்டாரத்தில் சராசரியாக 1000 ஏக்கர் பரப்பளவில் சோளம் சாகுபடி செய்யப்படுகிறது.சோளத்தைப் பொறுத்தவரை விவசாயிகளுக்கு தானியம் மற்றும் தீவனம் இரண்டுக்கும் பயன்படக்கூடிய ரகமாக இருப்பது நல்லது.இந்த நோக்கத்துடன் கடந்த 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கோ 32 ரகமானது 105 முதல் 110 நாட்களில் 220 முதல் 300 செமீ வரை வளரக் கூடியது.மானாவாரி மற்றும் இறவை சாகுபடி இரண்டுக்கும் ஏற்றது.தீவனம், தானியம் என இரண்டுக்கும் ஏற்ற ரகமாகும்.
நோய் எதிர்ப்புத் திறன்
இந்த ரக சோளப் பயிரின் இலைகள் நன்கு வளைந்ததாகவும் கதிர்கள் சமச்சீராகவும் தானியங்கள் மஞ்சளுடன் கூடிய வெள்ளை நிறத்திலும் காணப்படும்.இதன் 1000 தானியங்களின் எடை 16.25 கிராமாக இருப்பதால் ஏக்கருக்கு சராசரியாக ஒரு கிலோ தானிய மகசூலும், 2 ½ கிலோ அளவுக்கு தீவனமும் தரக்கூடிய ரகமாக உள்ளது.குருத்து ஈ, தண்டு துளைப்பான் உள்ளிட்ட பூச்சிகளுக்கும், அடிச் சாம்பல் நோய், கதிர் பூசண நோய் உள்ளிட்ட நோய்களுக்கும் எதிர்ப்புத் திறன் கொண்டது.மேலும் சோளத்தில் 11.31% முதல் 14.66% வரை புரதச்சத்தும் 4.95% முதல் 5.8% வரை நார்ச்சத்தும் கொண்டது' என்று அவர் கூறினார். மேலும் 'இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிறு தானியமான சோளம் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் தரமான விதைகள் கிடைக்கும் வகையில் விதைப் பண்ணைகள் அமைக்க வேண்டும். அந்த விதைப் பண்ணைகளில் உரிய நேரத்தில் வயல் ஆய்வுகள் மேற்கொண்டு கலவன்கள் அகற்றி விவசாயிகளுக்கு உரிய தொழில்நுட்பத் தகவல்கள் வழங்கி தரமான விதைகளாக உற்பத்தி செய்து விவசாயிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்'என்று விதைச் சான்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.மேலும் இந்த சோள ரகத்தினை விவசாயிகள் பயிரிட்டு தானியம், தீவனம் என இரண்டிலும் பயனடைவது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம் என்று அவர் கூறினார்.இந்த ஆய்வின் போது குடிமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தா, விதைச்சான்று அலுவலர்கள் ஹேமலதா, ஷர்மிளா பானு, உதவி விதை அலுவலர்கள் சீனிவாசன், பிரகாஷ் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.