பூக்கள் விலை உயர்வு
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தஞ்சையில் பூக்கள் விலை உயர்ந்து இருந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.600-க்கு விற்கப்பட்டது.
தஞ்சாவூர்;
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தஞ்சையில் பூக்கள் விலை உயர்ந்து இருந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.600-க்கு விற்கப்பட்டது.
ஆடிப்பெருக்கு விழா
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். ஆடி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிவன், பார்வதி வீற்றிருக்கும் சிவாலயங்கள் மற்றும் அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபடுவர். ஆடி 18-ந் தேதி ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி பெருக்கு அன்று, தாலி பாக்கியம் நிலைக்க சுமங்கலி பெண்கள் புது தாலி மாற்றிக் கொள்வர்.புதுமண பெண்ணுக்கு தாலி பிரித்து கோர்ப்பர். திருமணம் ஆகாத இளம்பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டும் என மஞ்சள் கயிறு கட்டி கொள்வார்கள். புது மற்றும் நல்ல காரியங்களை ஆடிப்பெருக்கன்று ஆரம்பித்தால் அந்த காரியம் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். அதன்படி ஆடி மாதம் 18-ந் தேதியான இன்று (வியாழக்கிழமை) ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.
பூக்கள் விலை உயர்வு
சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படும். அதேபோல் ஆடிப்பெருக்கையொட்டி தஞ்சையில் பூக்களின் விலை உயர்ந்து இருந்தது. தஞ்சை பூக்காரத்தெருவில் சுப்பிரமணியசாமி கோவில் அருகிலேயும், அண்ணாநகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்திலும் பூச்சந்தை செயல்பட்டு வருகிறது.பூச்சந்தைகளுக்கு திருச்சி, ஸ்ரீரங்கம், நிலக்கோட்டை, திண்டுக்கல், ஓசூர், மணப்பாறை மற்றும் தஞ்சையை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து திருவாரூர், வேளாங்கண்ணி, நாகை, வேதாரண்யம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, அரியலூர், திருமானூர், கந்தர்வக்கோட்டை, அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பூக்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.
மல்லிகைப்பூ கிலோ ரூ.600
இந்த சந்தைகளுக்கு பூக்களின் வரத்து அதிகமாக இருந்ததைபோல் ஆடிப்பெருக்கையொட்டி விற்பனையும் நன்றாக இருந்தது. தஞ்சை அண்ணாநகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் செயல்படும் பூச்சந்தையில் பூக்களின் விலை அதிகரித்து இருந்தது. கடந்த 2 தினங்களாக கிலோ ரூ.100-க்கு விற்ற செவ்வந்தி ரூ.250-க்கும், ரூ.200-க்கு விற்ற சம்பங்கி ரூ.300-க்கும், ரூ.100-க்கு விற்ற அரளி ரூ.300-க்கும், ரூ.250-க்கு விற்ற மல்லிகைப்பூ ரூ.600-க்கும் விற்பனையானது.அதேபோல் கிலோ ரூ.150-க்கு விற்ற முல்லைப்பூ ரூ.600-க்கும், ரூ.250-க்கு விற்ற ஜாதிமல்லி ரூ.500-க்கும், ரூ.250-க்கு விற்ற கனகாம்பரம் ரூ.500-க்கும் விற்பனையானது. மரிக்கொழுந்து ஒரு கட்டு ரூ.40-க்கும், ஆப்பிள்ரோஸ் ரூ.200-க்கும், செண்டிப்பூ ரூ.100-க்கும் விற்பனையானது. பூக்களின் விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் அதிகஅளவில் வந்து பூக்களை வாங்கி சென்றனர். அதேபோல் பூக்காரத்தெருவில் உள்ள பூச்சந்தையிலும் மக்கள் பூக்களை வாங்கி சென்றனர்.இது குறித்து பூ வியாபாரி கூறும்போது, கடந்த சில தினங்களாக பூக்கள் மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆடிப்பெருக்கையொட்டி பூக்களின் விலை அதிகரித்தது. விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து பூக்களை வாங்கி சென்றனர். பூக்கள் வரத்து அதிகமாக இருக்கிறது. பூக்கள் விற்பனையும் நன்றாக இருந்தது என்றார்.