விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்வு-கனகாம்பரம் கிலோ ரூ.1,200-க்கு விற்பனை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்வடைந்துள்ளது. கனகாம்பரம் கிலோ ரூ.1,200-க்கு விற்பனையானது.

Update: 2022-08-30 17:36 GMT

பரமத்திவேலூர்:

ஏலச்சந்தை

பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ஒரு கிலோ ரூ.500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.150-க்கும், அரளி கிலோ ரூ.200-க்கும், ரோஜா கிலோ ரூ.170-க்கும், முல்லை கிலோ ரூ.400-க்கும், செவ்வந்தி கிலோ ரூ.150-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் ஏலம் போனது.

பூக்கள் விலை உயர்வு

நேற்று நடைபெற்ற ஏல‌த்தில் குண்டுமல்லி ஒரு கிலோ ரூ.900-க்கும், சம்பங்கி கிலோ ரூ.280-க்கும், அரளி கிலோ ரூ.260-க்கும், ரோஜா கிலோ ரூ.220-க்கும், முல்லை கிலோ ரூ.800-க்கும், செவ்வந்தி கிலோ ரூ.220-க்கும் விற்பனையானது. கனகாம்பரம் கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து, ரூ.1,200-க்கு ஏலம் போனது.

விநாயகர் சதுர்த்தி விழா இன்று (புதன்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் பூக்கள் தேவை அதிகரித்துள்ளதால், அவற்றின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் உயர்ந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்