பூ கடைக்காரர்களை வெளியேற்றாமல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்

பூ கடைக்காரர்களை வெளியேற்றாமல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்

Update: 2023-07-13 14:12 GMT

திருப்பூர்,

திருப்பூர் காட்டன் மார்க்கெட்டில் இருந்து பூ கடைக்காரர்களை வெளியேற்றாமல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

பூ மார்க்கெட்

திருப்பூர் பெருமாள் கோவில் அருகே பூ மார்க்கெட் புதிதாக கட்டும் பணி நடைபெற்றதால் பல்லடம் ரோட்டில் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. புதிய பூ மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இருப்பினும் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் தற்காலிக பூ மார்க்கெட்டில் கடை அமைத்துள்ள வியாபாரிகள், புதிய மார்க்கெட்டுக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவுப்படி, வருகிற 17-ந் தேதிக்குள் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள பூ மார்க்கெட் கடைகளை காலி செய்ய மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

காட்டன் மார்க்கெட் வளாகம்

இந்த நிலையில் திருப்பூர் மாநகர ஒருங்கிணைந்த பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் மலர் மரகதம், கவுரவ ஆலோசகர் தம்பி குமாரசாமி, செயலாளர் ஜெய்லாப்தீன், பொருளாளர் ராஜேஸ்குமார், துணை தலைவர் சக்திவேல் உள்ளிட்டவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

பின்னர் இதுகுறித்து கூறியதாவது:-

காட்டன் மார்க்கெட் வளாகத்தில் 96 பூக்கடைகள் செயல்பட்டு வருகிறது. புதிதாக கட்டப்படும் மார்க்கெட்டில் ஏற்கனவே உள்ள வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கித்தரப்படும், கடைகளுக்கு விலை குறைவாக வாடகை நிர்ணயம் செய்து ஏலம் நடத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் திறந்தவெளி ஏலம் மூலமாக புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகள் ரூ.2½ கோடிக்கு ஏலம் விடப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூ கடை வியாபாரிகள் போராட்டம் நடத்தப்பட்டு காட்டன் மார்க்கெட் வளாகத்தில் செயல்பட வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.

வெளியேற்றக்கூடாது

பின்னர் மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி, மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. காட்டன் மார்க்கெட் வளாகத்தில் பூ கடைகளை செயல்பட அனுமதி அளிக்குமாறு வேளாண்மை துறை நிர்வாகத்துக்கும் மேயர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்தநிலையில் கடந்த 10-ந் தேதி கோர்ட்டு உத்தரவை காட்டி மாநகராட்சி அதிகாரிகள், காட்டன் மார்க்கெட்டில் உள்ள பூ கடைகளை 17-ந் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். அதில் பூ கடை வியாபாரிகளையோ, தற்போதைய குத்தகைதாரரான சங்க செயலாளரையோ எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை. அதனால் கோர்ட்டு உத்தரவு எங்களை கட்டுப்படுத்தாது. கோர்ட்டு நடவடிக்கையும் மேற்கொள்ள உள்ளோம். காட்டன் மார்க்கெட் வளாகத்தில் இருந்து எங்களை வெளியேற்ற முயற்சி எடுக்காமல் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையாளர், மாநகர போலீஸ் கமிஷனரிடமும் மனு கொடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்