மானாமதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளதால் மானாமதுரை வைகைஆற்றின் கரையின் இருபுறத்திலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-11-14 18:45 GMT

மானாமதுரை

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளதால் மானாமதுரை வைகைஆற்றின் கரையின் இருபுறத்திலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை தீவிரம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் தென் மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த வடகிழக்கு பருவ மழையானது சிவகங்கை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து இரவு, பகலாக பெய்து வருவதால் இங்குள்ள நீர்நிலைகளான ஆறுகள், ஏரிகள், குளம், கண்மாய், ஊருணிகள் நிரம்பி மறுகால் செல்கிறது. மேலும் தொடர் மழைக்கு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் குடியிருப்பு வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் பல வீடுகள் பலத்த மழைக்கு தாக்கு பிடிக்காமல் இடிந்து வருகிறது. மேலும் தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் அன்றாட பணிகளும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தொடர் மழை காரணமாக வைகை அணையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து திருப்புவனம், மானாமதுரை வழியாக செல்லும் வைகைஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மானாமதுரை மற்றும் திருப்புவனம் அருகே உள்ள படுகையணையில் வெள்ளம் இருகரைகளை தொட்டு செல்கிறது.

வெள்ளப்பெருக்கு

மேலும் தொடர் மழை காரணமாக வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கைப்பட்டு வருகின்றனர். மேலும் தற்போது வெள்ளப்பெருக்கு செல்வதால் மானாமதுரை வைகையாற்றில் யாரும் உள்ளே இறங்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர சிவகங்கை மாவட்டத்தில் மணிமுத்தாறு, தேனாறு, பாலாறு உள்ளிட்ட ஆறுகளிலும் தொடர் மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. திருப்புவனம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இங்கு பயிரிடப்பட்ட வாழை பயிர், மிளகாய் உள்ளிட்ட செடிகள் மழைநீரில் மூழ்கி பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்