குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை
வெள்ளப்பெருக்கு காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி, பழைய அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.;
தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் கடந்த மாதம் 30 ஆம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே மெயின் அருவியை தவிர ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட மற்ற அருவிகள் அனைத்திலும் தண்ணீர் வரத்து கடந்த 1-ம் தேதி சீரானது. இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த சூழலில் மெயின் அருவியிலும் தண்ணீர் வரத்து சீரானதால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு தென்காசி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வெள்ளப்பெருக்கால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருப்பது சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.